நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்துக்கு ஆப்பு! புதிய யாப்பும் இல்லை, அரசியல் தீர்வும் இல்லை
இலங்கையில் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிலிருந்து அதன் கூட்டுக்கட்சியினர் சிலர் வெளியேறப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி (Economic recession) நிலவுவதாக காண்பிக்கப்படுகிறது. இது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை அதாவது பொருளாதார மந்தத்தை(economic depression ) ஏற்படுத்தும் என ஊடகங்களும் சமூக வலைதளங்களும் செய்தியை வெளியிட்டு கொண்டிருக்கின்றன.
இந்த தருணத்தில் கோட்டாபய அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதான செய்திகளும் மிகைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏதோ இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என பலரும் கனவு காண்கின்றார்கள்.
உண்மையில் இது வேண்டுமென்றே உருவாக்கப்பட இருக்கின்ற ஒரு நெருக்கடியான நிலைமையின் தோற்றப்பாடே தவிர வேறொன்றும் இல்லை. இது பற்றி சற்று கூர்ந்து பார்ப்போம்.
இலங்கையில் ஏற்பட்டிருப்பது பொருளாதார நெருக்கடி மட்டுமே. இது சில மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும். இந்தப் பொருளாதார நெருக்கடி இலங்கையை முடக்கமடையச் செய்யாது. ஏனெனில் இலங்கை கைத்தொழில் உற்பத்தி நாடல்ல.
இது சேவைகளை அடிப்படையாகக் கொண்டதும் பொருட்களை வாங்கி முடிவு பொருளாக மாற்றி விற்கும் நாடு. இந்த அடிப்படையிலான பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் எந்த தொழிற்சாலைகளும் மூடப்படவில்லை. எந்த ஒரு வங்கியும் இற்றை வரைக்கும் திவாலாகி மூடப்படவில்லை. அதற்கான சாத்தியமும் இன்னும் ஏற்படவில்லை.
எனவே இது ஒரு தற்காலிகமான நெருக்கடி மட்டுமே. இதற்கு ஏதாவது ஒரு சர்வதேச நிதி நிறுவனத்திடம் அல்லது அரசிடம் கடனைப் பெற்றுவிட்டால் நெருக்கடி தீர்ந்துவிடும். இந்த நெருக்கடியை சீனாவினால் இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும்.
ஆனால் அதனை தற்போது இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. காரணம் இலங்கை அரசாங்கம் மேலும் மேலும் சீனாவை நோக்கிச் சாய்ந்து செல்கின்றது என்ற குற்றச்சாட்டு இந்தியா உள்ளிட்ட மேற்குலகத்தினால் வைக்கப்படுகிறது.
எனவே அந்த குற்றச்சாட்டில் இருந்து நீங்குவதற்கு சீனாவிடம் கடனை பெறாமல் மேற்குலகம் சார்ந்த இந்தியாவிடம் அல்லது சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடனை பெறுவது தான் சிறந்த வழியாகும்.
எனவே தான் இலங்கை அரசாங்கம் இந்த பிரச்சினையை நீட்டிக்கொண்டே செல்கிறது. அவ்வாறு சீனா தவிர்ந்த ஏனைய இடங்களில் கடனைப் பெற்றுக் கொண்டால் இந்த குற்றச்சாட்டில் இருந்து தன்னை இலகுவாக விடுவித்துக் கொள்ளும். அதற்காகவே இந்த நெருக்கடியைத் தொடர்ந்து நீடிக்க இலங்கை அரசாங்கம் விரும்புகிறது, அனுமதிக்கிறது.
ஆனால் தற்போது இலங்கையின் ஆளும் பொது ஜன பெரமுன கட்சியின் கூட்டாளிகள், கட்சியிலிருந்து வெளியேற போவதாக அறிவித்து விட்டார்கள்.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கமல்வீர போன்ற சிலர் அரசாங்கத்தை விட்டு வெளியேறி தனித்து இயங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்க் கட்சியுடன் சேரமாட்டோம் எனவும் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார்கள். இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் பொருளியல் நெருக்கடியில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.
சிங்கள பௌத்த பேரினவாத அரசு இவ்வாறு தான் அரசாங்கங்கள் நெருக்கடி ஏற்படுகின்றபோது பிரச்சினைகளை தோற்றுவித்து, அணுகி , மடைமாற்றங்களைச் செய்யும்.
இது சிங்கள ராஜதந்திரத்தில் இயல்பான வழக்கம். இதனை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் இலங்கை அரசியலைப் புரிந்து கொள்வது என்பது மிகக் கடினமாகிவிடும்.
இப்போது அரசாங்கத்தை விட்டு வெளியே வருவோம் என்று அறிவித்ததனால் இன்று இருக்கின்ற இலங்கை ஆளும் கட்சி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்து விடும். வெளியேறுபவர்கள் வெறும் நால்வர் மட்டும் வெளியேறுவார்கள் என்றில்லை.
இவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைத்துத்தான் வெளியேருவார்கள். இது திட்டமிட்ட அடிப்படையிலேயே நிகழ்கிறது. இந்த திட்டமிட்ட செயல் என்ன என்பது பற்றி சற்று பார்க்க வேண்டும்.
இலங்கை அரசியலில் தமிழர் சார்ந்த பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், மற்றும் புதிய அரசியலமைப்பு, மாகாண சபைத் தேர்தல் என மிகச் சிக்கலானதும் நெருக்கடி மிக்கதுமான பிரச்சினைகளுக்கு இலங்கை பேரினவாத அரசு முகம் கொடுக்கிறது.
இந்தப் பிரச்சினைகளில் இருந்து இலகுவாக வெளியேறுவதற்கு இத்தகைய தந்திரோபாயமான அரசியல் சதிகளையும், தந்திரங்களையும் இப்போது சிங்கள ராஜதந்திரிகள் பிரயோகிக்க தொடங்கிவிட்டார்கள்.
ஆளும் கட்சியினுடைய கூட்டணியில் இருந்து குறிப்பிட்ட தொகையினர் வெளியேறி செல்கின்றபோது அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துவிடும்.
இதனால் புதிய அரசியலமைப்பு ஒன்றை வெளியிடுவதாக இவ்வளவு காலம் கூறி வந்ததை இப்போது தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை எனவே புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என தட்டிக் கழித்து விடுவார்கள்.
தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் பற்றி பேசினால் இப்போது அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துவிட்டது இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் பற்றி பேசினால் இன்னும் பலர் வெளியேறி இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்ற காரணத்தை முன்வைத்து தமிழர் பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியாது தப்பித்துக் கொள்வார்கள்.
அடுத்து மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் என்று வற்புறுத்தினால் பொது ஜன பெரமுன கட்சியின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணசபை ஒழிக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதியை வழங்கியிருந்தார்கள்.
எனவே இப்போது தேர்தலை நடத்த முன்வந்தால் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியே வருவோம் என சொல்வார்கள். எனவே இத்தகையோர் நெருக்கடியான நிலையில் கட்சியை பாதுகாப்பதா அரசாங்கத்தை பாதுகாப்பதா என்ற பிரச்சினை வருகின்றபோது தேர்தலை நடத்தாமல் விட்டால் இரண்டையும் பாதுகாக்கலாம்.
எனவே தேர்தலையும் நடத்த முடியாது என காரணத்தை கேட்பார்களுக்கு கற்பித்து விடுவார்கள். அதேபோலவே தமிழ் அரசியல் கட்சிகளும், அண்டை நாடும், சர்வதேசமும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துங்கள் என்று வற்புறுத்தினாலும் அதற்கு மேற்குறிப்பிட்ட காரணத்தை காட்டி தப்பித்துக் கொள்வார்கள்.
இப்போது புரிகிறதல்லவா இலங்கை அரசாங்கம் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடியையும் சர்வதேச அழுத்தங்களையும் எவ்வாறு முகம் கொடுத்து தம்மை தக்கவைத்து வெற்றி கொள்ளலாம் என்ற தந்திரத்தை எவ்வளவு சாணக்கியமாக வகுத்து வைத்திருக்கிறது என்பது.
இங்கே சிங்கள ராஜததந்திரம் அரசியல் மாயாஜால வித்தை செய்து காட்டுகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்கின்ற எல்லா சதிகளுக்கும், தந்திரங்களுக்கும் சட்டபூர்வமான ஆவணங்களையும் அத்தாட்சிகளையும் காட்டவும் அவர்கள் முன்னேற்பாடு செய்துகொண்டே செயல்படுவர் .
இன்றைய நெருக்கடிக்கு இந்த நாடாளுமன்ற ஆசனங்களையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிலைமை குலைகிறது என்பதையும காரணங்காட்டி தப்பித்துக் கொள்வார்கள். இவ்வாறு தான் கடந்த 75 ஆண்டுகளாக உலகத்தையும் தமிழர்களையும் இந்த சிங்கள பேரினவாத சக்திகள் ஏமாற்றி வருகிறார்கள் இப்போது புதிய அரசியல் யாப்பு என்ற கற்பனையும், கட்டுக்கதைகளும் கலைக்கப்படுகிறது.
13 ஆம் திருத்தச் சட்டம் என்பது பாதாளத்திற்குள் தள்ளிவிடப்பட்டவிட்டது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றாகிவிட்டது. இதன் மூலம் இலங்கை அரசு சிங்கள மக்களை மமனம் குளிர்வித்து அனைத்து நெருக்கடிகளையும் கடந்துவிடும்.
இதற்குப் பின்னர் இலங்கை பொருளாதார நெருக்கடிகள் குறுகிய காலத்துக்குள் தீர்க்கப்பட்டுவிடும். அதனை அடுத்து இரண்டு ஆண்டுகள் கழிய மீண்டும் தேர்தல் வரும்.
இந்தத் தேர்தலில் பிரிந்துசென்ற இந்தக் கூட்டுக் கட்சிகள் மீண்டும் பழையபடி தேர்தல் கூட்டு என ஒன்றிணைந்து விடுவார்கள். பிரிந்தவர் கூடினால் பின்பு பேசவும் வேண்டுமா? போட்டி போட்டு தமிழர் உரிமைகளை மறுக்கவும் ஒடுக்கவும் கங்கணம்கட்டி செயற்படுவர்.
"யானைகள் பிரிந்து நின்று சண்டையிட்டாலும் புல்லுக்குதான் சேதம் மாறாக யானைகள் கூடிக் குலாவி புணர்ந்தாலும் புல்லுக்குதான் சேதம்" என்ற தமிழில் ஒரு கூற்று உண்டு. இது எமக்குப் பொருத்தமானது. இங்கே யானைகளாக சிங்களத்தையும் புல்லாக ஈழத்தமிழரையும் ஒப்பிட்டு வைத்துப் பார்த்தால் ஈழத்தமிழரின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது புரியும்.
இவ்வாறு தான் தமிழ் மக்களையும், உலகத்தையும் ஏமாற்றுவதற்கு இந்தத் தொடர் நாடகம் தொடர்ச்சியாக நடக்கும். காலம் உருண்டோடும். காட்சிகளும் மாறும். உலகமும், தமிழர்களும் பழையதை மறந்து விடுவர். புதிய நெருக்கடிகள் தோன்றும்.
இந்த புதிய நெருக்கடிகளை நோக்கியே உலகமும் நாமும் சிந்திப்போம். ஆனால் சிங்கள தேசம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து யாவரையும் மாற்றுவதில் வெற்றி வெற்றி முன்னோக்கிச் செல்லும்.
கடந்த 2500 ஆண்டுகால இலங்கையின் வரலாற்றில் பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களையும் அண்டை நாடுகளையும் இவ்வாறுதான் ஏமாற்றி சமாளித்து முன்னோக்கி நகர்ந்து செல்கிறது.
அதனுடைய வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நீண்ட வரலாற்றுப் போக்கில் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய அனைத்து தந்திரங்களையும் கையாழ்வதில் சிறப்புத் தேர்ச்சி உடையதாக தகவமைத்து முன்னேறிச் செல்கிறது.
ஈழத்தமிழர்கள் இத்தகைய சிங்கள அரசின் மாஜ அரசியலுக்குள் சிக்குண்டு மாண்டு போகாமல் தம்மை சரியான வகையில் தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது
கட்டுரை : தி.திபாகரன், M.A.