மகிந்த அவுட்! அடுத்த இலக்கு பசில் - குறி வைக்கப்பட்ட கோட்டாபய: ரணிலின் ராஜதந்திர வியூகம் அம்பலம்
மகிந்த ராஜபக்ச என்ற பிரதமரை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தைப் பிடித்து ரணில் விக்ரமசிங்க உள்ளே வந்துவிட்டார். இப்போது அமெரிக்க இலங்கை இரட்டை பிரஜையான பசில் ராஜபக்சவை அகற்றும் திட்டத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவையும் அனுப்பிவிட்டால், ரணிலின் அடுத்த குறி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நோக்கித் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.
புலிகளை பலவீனப்படுத்தும் ரணிலின் தந்திரம்
அரசியலில் ரணில் விக்ரமசிங்க ஒரு Soft Killer. மகிந்த ராஜபக்ச ஒரு Violent Killer. அதாவது, மகிந்த நேரடி யுத்தத்துக்குப் போனார். அந்த யுத்தத்தில் தமிழ்ப் புலிகளும் கொல்லப்பட்டார்கள். அப்பாவித் தமிழ் மக்களும் கொல்லப்பட்டார்கள்.
தமிழ் மக்கள் சாவது மகிந்தவுக்கு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஆனால், ரணிலின் பாணி வேறு. அவர், புலிகளை யுத்தத்தில் கொல்லப் போகவில்லை. புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்தார். அதன் மூலம் காட்டில் தளம் அமைத்து போர் செய்த புலிகளை நாட்டுக்குள் கொண்டுவந்து, போர் இல்லாத வாழ்வுக்கு அவர்களை பழக்கப்படுத்தி, புலிகளை பலவீனப்படுத்தினார்.
அதன்மூலம் புலிகளின் கிழக்கு மாகாண பிரதான தளபதி கருணாவை புலிகளிலிருந்து பிரித்தெடுத்தார். இதை செய்துவிட்டு ரணில் அமைதியாக இருந்தார். அதனால்தான் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து, புலிகள் ரணிலை தோற்கடித்தார்கள்.
புலிகளின் தோல்விக்கு பிரதான காரணகர்த்தாவாக இருந்த ரணில்
அதன்பின் மகிந்த போரில் புலிகளை வெல்ல இந்த கருணாவின் பிரிவுதான் பிரதான காரணமாக அமைந்தது. போரில் வெற்றிபெற்று ராஜபக்ச சகோதரர்கள் சிங்கள மக்கள் மத்தியில் “யாராலும் வெல்ல முடியாத புலிகளை வென்ற வீரர்களாக” புகழ்பெற்றனர்.
ஆனால், என்னைக் கேட்டால், போரில் புலிகள் தோற்க பிரதான காரணம், புலிகளை பிரித்த ரணில் விக்ரமசிங்கதான் என்று உறுதியாக சொல்வேன். இதை அறிந்துகொண்டால்தான், இன்று இலங்கையில் ஆறாவது முறை பிரதமராக ஆகியுள்ள ரணில் விக்ரமசிங்க என்ற அரசியல்வாதியின் “கெரக்டரை” புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் இலங்கை அரசியலில் ரணில் விக்ரமசிங்க, “நரி” என்று அழைக்கப்படுகிறார்.
ரணிலுக்கு இன்று என்ன தேவை?
இப்போதும், ராஜபக்சர்களை காப்பாற்றவே இவர் பதவி ஏற்றார் என பரவலாகக் குற்றஞ் சாட்டுகிறார்கள். அது அத்துனை உண்மையல்ல.
ரணிலுக்கு இன்று தேவை என்ன? கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்த தன்னையும், அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் காப்பாற்றி, தூக்கி நிறுத்த வேண்டும்.
அவரது கட்சியை உடைத்துக்கொண்டு, வெளியே வந்து, புது கட்சி அமைத்து, நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டும் என்று செயல்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்த வேண்டும். இவைதான் ரணிலின் பிரதான அரசியல் நோக்கங்கள். அதற்காக அவர் இன்று எதையும் செய்வார்.
மகிந்த அவுட்! ரணிலின் அடுத்த இலக்கு பசில்
அவரிடம் இப்போது இழக்க ஒன்றும் இல்லை. அவரை எவ்வளவு கழுவி, கழுவி ஊற்றினாலும் அவர் அலட்டிக்கொள்வதே இல்லை. இந்த Soft Killer, மகிந்த ராஜபக்ச என்ற பிரதமரை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தைப் பிடித்து உள்ளே வந்துவிட்டார்.
இப்போது அமெரிக்க இலங்கை இரட்டை பிரஜையான பசில் ராஜபக்சவை அகற்ற அரசியலமைப்புத் திருத்தமொன்றை கொண்டுவர முயல்கிறார். அவரை அகற்ற அவரது ஆளும் கட்சியில் இருந்தே கணிசமான எம்.பிக்களை பிரித்து எடுத்துக்கொண்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷவையும் அனுப்பிவிட்டால், அவரது அடுத்த குறி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நோக்கித் திரும்பும். அவரை அனுப்பிவிட்டு, காலியாகும் இடத்தில் ஜனாதிபதியாக அமர ரணில் கனவு காண்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
