கையடக்க தொலைபேசி பாவனை குறித்து எச்சரித்த பெற்றோர்! யுவதிகள் இருவர் எடுத்த விபரீத முடிவு
கையடக்கத் தொலைபேசி பாவிக்க வேண்டாமென பெற்றோர் எச்சரித்ததையடுத்து இரு யுவதிகள் தற்கொலைக்கு முயன்ற இரு சம்பவங்கள் திருகோணமலையில் இன்று பதிவாகியுள்ளது.
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரி பகுதியில் 17 வயதுடைய யுவதியொருவர் கையடக்க தொலைபேசியை பாவித்த போது கையடக்கதொலைபேசி தேவை இல்லை என உறவினர் ஒருவர் கூறியதையடுத்து அந்த யுவதி மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதி திருகோணமலை ஆனந்தபுரி பகுதியை சேர்ந்த 17 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , நாளைய தினம் பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ரொட்டவெவ கிராமத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரத்தில் பரீட்சை எழுத உள்ள மாணவி ஒருவரின் தந்தை பரீட்சைக்கு படிக்குமாறும், கையடக்கத் தொலைபேசியில் படம் பார்க்க வேண்டாம் எனவும் கூறி விட்டு அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோது அந்த யுவதி மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் மயக்கமுற்ற நிலையில், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின்
பேச்சாளரொருவர் தெரிவித்தார்.



