சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பெரும் பதற்றம்! முக்கிய துறைமுகங்களை கைப்பற்றி நுழைந்த அதிகாரிகள்
பனாமா கால்வாயின் இரு முனைகளிலும் அமைந்துள்ள இரண்டு முக்கிய துறைமுகங்களை, பனாமா நாட்டின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, ஹொங்கொங்கைச் சேர்ந்த சி.கே. ஹட்சின்சன் (CK Hutchison) நிறுவனத்திடமிருந்து அந்நாட்டு அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
பசிபிக் முனையில் உள்ள பால்போ (Balboa) மற்றும் அட்லாண்டிக் முனையில் உள்ள கிறிஸ்டோபால் (Cristobal) ஆகிய இரண்டு துறைமுக முனையங்களுக்குள் பனாமா அதிகாரிகள் நேரடியாக நுழைந்து, அவற்றின் நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக அந்த நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
அவசர சமூக நலன்
"அவசர சமூக நலன் கருதி" இந்தத் துறைமுகங்களை ஆக்கிரமிக்க பனாமா கடல்சார் அதிகாரசபைக்கு அரசாங்க ஆணை மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையின்படி, துறைமுகத்தின் கணினி அமைப்புகள் மற்றும் பாரந்தூக்கிகள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கையகப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை உண்டு.
பனாமா போர்ட்ஸ் என்ற துணை நிறுவனத்தின் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு தனது ஒப்பந்தத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு சி.கே.ஹட்சின்சன் புதுப்பித்திருந்தது. இருப்பினும், அந்த ஒப்பந்தம் "அரசியலமைப்பிற்கு முரணானது" என்று பனாமா உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை, இந்த விவகாரம் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு பெரிய அரசியல் மோதலாக மாறியுள்ளது.
சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பதற்றம்
கடந்த ஆண்டு மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குற்றம் சாட்டியதுடன், அதனை மீண்டும் அமெரிக்காவின் செல்வாக்கிற்குள் கொண்டு வரப்போவதாக உறுதியளித்திருந்தார்.

இந்தத் தீர்ப்பை "அபத்தமானது" மற்றும் "வெட்கக்கேடானது" என்று வர்ணித்துள்ள சீன அரசாங்கம், இதற்காக பனாமா அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் "கடுமையான விலையை" கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.
சீனாவின் இந்த மிரட்டலை பனாமா ஜனாதிபதி ஜோஸ் ரவுல் முலினோ (Jose Raul Mulino) வன்மையாக மறுத்துள்ளார். பனாமா சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நாடு என்றும், அரசாங்கத்திடமிருந்து சுதந்திரமாகச் செயல்படும் நீதித்துறையின் முடிவுகளை மதிப்பதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தம், சீனாவின் மிரட்டல் மற்றும் பனாமாவின் நீதித்துறை நடவடிக்கை ஆகியவற்றுக்கு இடையே இந்தத் துறைமுக விவகாரம் தற்போது சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.