சுரேஷ் சலே மீதான விசாரணை.. ஷானி அபேசேகர - ரவி செனவிரத்னவை நியமிக்க கோரிய கர்தினால்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவுடனான இடைக்கால மனுக்கள் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், மதத் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடுவது பொருத்தமானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்தினாலின் கோரிக்கை..
இதன்போது அவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூற்றை சுட்டிக்காட்டிய அவர், ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரு அதிகாரிகளையும் அந்தந்தப் பதவிகளுக்கு நியமிக்குமாறு பேராயரே (கர்டினல்) கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தார்.

அத்துடன், குறித்த இரு அதிகாரிகளும் தாம் தீவிர அரசியலில் ஈடுபட்டதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் கூட்டு அமைப்பில் பணியாற்றியதாகவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்தியக்கடதாசிகளில் குறிப்பிட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணைகளில் அரசியல் தலையீடுகளுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும், நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படக் கூடாது என்றும் ஜானக டி சில்வா ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இருப்பினும், பேராயரால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால மனுவுக்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.