கிளிநொச்சியில் காடுகளை வெட்டி காணி பிடிக்கப்படுகிறதா..! உரிமையாளர் கூறியுள்ள விடயம்
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ள நிலையில் குறித்த காணி உரிமையாளர் இது தொடர்பில் எமது ஊடகத்திற்கு தெளிப்படுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
காணி உரிமையாளரான அவுஸ்திரேலியாவை தற்போதைய வதிவிடமாக கொண்ட செல்வச்சந்திரன் கார்த்திகேசு கூறுகையில், இக்காணியானது எனக்கு சொந்தமானது. எனது 7 தலைமுறையின் சொத்தும் ஆகும், இதனை பலவருட யுத்தம் காரணமாக எமக்கு சென்று பராமரிக்கவோ அல்லது அதனை வேறு விவசாய வேலைகளுக்கு எடுக்கவோ முடியாமல் போனதனால், இலங்கை அரசாங்கம் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குக் கீழ் கொண்டு வந்ததுள்ளனர்.
இதன்பின் நான் இலங்கைக்கு வந்து சட்டரீதியான ஆவணங்களை சமர்ப்பித்து எனக்கு சொந்தமான காணி என வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், இக்காணியினை சுத்தம் செய்வதற்கு ஒருகுழுவினரை நியமித்துள்ளேன்.
இது சட்டவிரோத காடழிப்பு என சொல்ல முடியாது, எனக்கு சொந்தமானதொரு காணி என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு பொருந்தக்கூடிய ஆவணங்கள் சிலவற்றினையும் எமது செய்திசேவை உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.
இதுபற்றி வனப்பாதுகாப்பு திணைக்களத்தை தொடர்புகொண்டபோது, அவர் சமர்ப்பித்த கடிதத்திற்கு இன்னும் வனப்பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கவில்லை எனவும் சட்டரீதியான வழக்கும் முடிவுபெறவில்லை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி - பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் ஏ9 வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள காட்டுப்பகுதியில் இயந்திர உபகரணங்கள் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி பல ஏக்கர் பரப்பளவில் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்களது கோரிக்கை
இந்த பிரதேசத்திற்கு அருகில் இராணுவ முகாம் ஒன்றும் இருக்கிறது. இது தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பளை பொலிஸார், கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கும் பொது மக்கள் தாம் காடுகளை வெட்டுகின்ற சிலரிடம் சென்று விசாரித்த போது அவர்கள் பதிலளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
எனவே உரிய தரப்பினர் குறித்த காடழிப்பு விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |