கொழும்பில் சூதாட்ட விடுதிக்கு சென்ற பாகிஸ்தான் அணியின் முக்கியஸ்தர்கள்: எழுந்துள்ள சர்ச்சை
பாகிஸ்தான் அணியின் தற்போதைய ஊடக மேலாளர் உமர் ஃபாரூக் கல்சன் மற்றும் குழுவின் பொது முகாமையாளர் அட்னான் அலி இருவரும் கொழும்பு சூதாட்ட விடுதிக்கு சென்ற படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதனையடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆசியக் கிண்ணத்துக்காக பாகிஸ்தானியக் குழுவுடன் சென்றுள்ள அவர்கள் இருவரும் கொழும்பில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் சூதாட்டக் கூடம் என்பது, சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு அடிப்படையில் தடைசெய்யப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.
கேலிக்குள்ளாக்கப்படும் கூற்று
இந்த படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ள நிலையில் சமூக ஊடகங்களில் பல பாகிஸ்தான் ரசிகர்கள்; தமது கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
எனினும் குறித்த இரண்டு அதிகாரிகளும், தாம் இரவு உணவு சாப்பிடுவதற்காக மட்டுமே கேசினோவிற்குச் சென்றதாகத் தெளிவுபடுத்தினர்.
இதேவேளை சமூக ஊடகங்களாலும் சில முன்னாள் டெஸ்ட் வீரர்களாலும் இந்தக்கூற்று கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.