சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுமுறை! வரிச் சலுகைகளை விரிவாக்க அமெரிக்க திறைசேரி திணைக்களம் நடவடிக்கை
ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய குடும்ப மற்றும் மருத்துவ விடுமுறைகளை வழங்கும் தொழில் வழங்குனர்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை மேலும் விரிவாக்குவதற்கான புதிய வழிகாட்டல்களை அமெரிக்க திறைசேரி திணைக்களம் வெளியிடவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த புதிய கொள்கையின் மூலம், ஊழியர்களின் விடுமுறைக் காலத்தில் காப்பீட்டுக் கொடுப்பனவுகளை ஈடுசெய்யும் வகையில் காப்பீட்டுக் தவணைக் கட்டணங்களை செலுத்தும் நிறுவன உரிமையாளர்களும் இனி வரிச் சலுகைகளைக் கோர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப விடுமுறை
குறைந்தது இரண்டு வார கால குடும்ப மற்றும் மருத்துவ விடுமுறையை ஊழியரின் வழக்கமான சம்பளத்தில் 50 வீதத்திற்கு குறையாத தொகையுடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த வரி விலக்கு உரித்தாகும்.

அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் தங்களது குடும்பத்தினரைப் பராமரிப்பதற்கும் வருமானத்தைப் பெறுவதற்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கும் நோக்கிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெஸன்ட் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பில் (OECD) அங்கத்துவம் வகிக்கும் 38 நாடுகளில் கட்டாயச் சம்பளத்துடன்கூடிய விடுமுறைக் கொள்கை இல்லாத ஒரே நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.
இந்நிலையில், கூட்டாட்சி அரசாங்கத்தின் நேரடி நிதிப் பங்களிப்பின்றி வரிச் சலுகைகள் மூலம் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.