அரசாங்கத்தின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது
அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுகின்றது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் பேரவையின் (பெபரல்) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பாக அரசாங்கம் ஒரு தீர்க்கமான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பழைய விகிதாசார முறையின் கீழ் இத்தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் அதைத் தவிர்த்து செயல்படுவது ஜனநாயக விரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது தேர்தல்களை கோரி தீவிரமாக போராடிய அரசாங்கம், தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவதே மக்களின் வாக்குரிமைக்கு அளிக்கும் மரியாதையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மாகாண சபை முறைமை பொருத்தமற்றது என கருதினால், அரசியலமைப்புத் திருத்தம் மூலம் அதனை ரத்து செய்ய வேண்டும்; இல்லையெனில், தற்போதைய நடைமுறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு விருப்பமிருப்பின், மிகக் குறைந்த காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்காக இரண்டு தனிநபர் நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், இத்தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அழுத்தங்களை வழங்க வேண்டும். தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் ஜனநாயகப் பண்புகளுடன் நடந்துகொள்வதே மிகவும் முக்கியமானதாகும் என ரோஹண ஹெட்டியாரச்சித் தெரிவித்துள்ளார்.