பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லத்தில் மறக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் (Photos)
தாயகக் கனவோடு இறுதி மூச்சுவரை களம் நின்று போராடி போர்க்களத்தில் தாயக மண்ணை முத்தமிட்டு உயிர் விட்ட தியாகிகளை நினைவில் கொள்ளும் நாளாக மாவீரர் நாள் அமைந்துள்ளது.
போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை விதைத்த பூமியிலுள்ள இடம் தான் மாவீரர் துயிலும் இல்லம் ஆகும்.
தாயகப் பரப்பில் காணப்படும் மாவீரர் துயிலுமில்லம் போல் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர்களை விதைத்த இடங்கள் இருக்கின்றன என்பதும் சுட்டிக்காட்டல் பொருத்தமானது.

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களில் மாவீரர்களை விதைத்த இடங்கள் உள்ளன. தமிழீழ போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் ஆயுதப் போராட்டத்தின் இறுதி நாட்களிலும் வீரச்சாவினைத் தழுவிய மாவீர்களின் வித்துடல்களை விதைத்த துயிலுமில்லங்கள் இருக்கின்றன.
மணலாற்றுக் காட்டினுள்ளும் குறிப்பிட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன.
முள்ளியவளை மாவீர் துயிலுமில்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம், அளம்பில் மாவீரர் துயிலுமில்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம், தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம், முள்ளிவாய்க்கால் மாவீர் துயிலுமில்லம், இரட்டைவாய்கால் மாவீரர் துயிலுமில்லம், பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலுமில்லம், நித்தகைக்குள மாவீரர் துயிலுமில்லம், கோடாலிக்கல்லு மாவீர் துயிலுமில்லம் (டடி பேஸ்) என்பவற்றை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களாக இனங்கண்டு கூற முடியும் என கல்விக்கழகத்தில் பணியாற்றிய ஆசிரியர் விளக்குகின்றார்.
மாவீரர் பணிமனையின் நியதிகளுக்கேற்ப மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களாக கருதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
நித்தகைக்குள மாவீர் துயிலுமில்லம் கோடாலிக்கல்லு மாவீர் துயிலுமில்லம் ஆகியன இந்திய அமைதிப்படையினருடனான போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கானதாக இருக்கின்றது.
தற்போது நித்தகைக்குள மாவீரர் துயிலுமில்லம், பச்சை புல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லம் என்பனவற்றில் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அவர் தன் கவலையையும் வெளிப்படுத்தியிருந்தார்.
பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லம்
ஆனந்தபுரத்திற்கும் அம்பலவன்பொக்கனைக்கும் இடையில் உள்ள பெருவெளிதான் பச்சைப்புல்மோட்டை என்ற இடமாகும்.
மேட்டு நிலங்களையும் சதுப்பு நிலங்களையும் ஒரு சேர கொண்டமைந்த இந்த பச்சைப் புல்மோட்டையின் சதுப்பு நிலம் நந்திக்கடல் நீரேரியின் நீரேந்து பகுதியாக இருக்கின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
இறுதிப் போரின் போது மல்லாவி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த மக்களே அதிகம் அங்கு இருந்தனர். தனுடைய வயல் நிலங்களும் பச்சைப் புல்மோட்டையில் இருப்பதாக அம்பலவன்பொக்கனையைச் சேர்ந்த விவசாயி தெரிவித்திருந்தமையும் இங்கே கவனிக்கத்தக்கது.
பச்சை புல்மோட்டையின் மேட்டு நிலப்பகுதியில் அரை ஏக்கரிலும் கூடிய பரப்பில் மூன்று நிரல்களில் வித்துடல்களை விதைத்து அதன் மீது மணலால் இடப்படும் மண்மேட்டை தான் அவதானித்ததாகவும் முந்நூறுக்கும் மேற்பட்ட மாவீர்களின் வித்துடல்கள் அப்போது அங்கே விதைக்கப்பட்டிருக்கும் என மேலும் அந்த விவசாயி குறிப்பிட்டார்.
துயிலுமில்லத்தில் வித்துடல்களை விதைப்பதற்கு குழிகளை வெட்டியதாக மற்றொரு வயோதிபர் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு நாளும் தம் குழு விதை குழிகளை வெட்டியதாகவும் பச்சைப்புல்மோட்டையில் ஐநூறு வரையான மாவீர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுகின்றார்.
தன் பெறாமகன் ஒருவரின் வித்துடலும் பச்சைப் புல்மோட்டையில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டதாகவும் மாவீரரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அந்த துயிலுமில்லத்தின் வைத்தே நடந்ததாகவும் புதுமாத்தளனைச் சேர்ந்த ஒரு மாவீரரின் பெற்றோர் குறிப்பிடுவதும் சுட்டிக் காட்டத்தக்கது.
இறுதிப் போரின் போது பச்சைப் புல்மோட்டையில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டமைக்கு அதனுடன் தொடர்புபட்ட மக்களே சான்றுகளாக இன்றும் இருக்கின்றனர்.
தாயகப் பரப்பிலும் உலகில் தமிழர் வாழும் இடங்களிலும் மாவீரர்களை நினைவில் கொள்ளும் இன்றைய நாளில் பச்சைப் புல்மோட்டை மாவீரர் துயிலுமில்லம் மறக்கப்பட்டுப் போனது ஏன் என்ற கேள்வி விடையில்லாது தொடர்ந்து வருகின்றது என சமூக விடய ஆய்வாளர் வரதன் அவர்கள் குறிப்பிட்டார்.
மாவீரர் பணிமனை போலொரு கட்டமைப்பு வேண்டும்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் பணிமனையினால் மாவீரர் துயிலுமில்லங்கள் நிர்வகிக்கப்பட்டு வந்ததோடு யார் ஒருவரை மாவீரராக கொள்ள முடியும் என்பதனையும் நிர்வகித்து வந்திருந்திருந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
அதனைப் போன்ற ஒரு பொது நிர்வாக கட்டமைப்பும் அதற்கான விதிமுறைகளும் இன்றைய சூழலில் அவசியமாகின்றதனை உணர முடிகின்றது.
தன்னெழுச்சியாக திரண்டு மாவீரர்களை அஞ்சலிக்கும் போது நெறிபிறளாத அணுகு முறைகளை தொடர்ச்சியாக பேண இது உதவும் என்பதோடு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளை எதிர்த்து போராடுவதோடு தமிழீழ மாவீரர் நாளினை உலக சட்ட வரம்புகளால் பாதுகாக்கக் கூடிய ஒரு வழியினை தேட முடியும் என சட்டத்துறை பயிலுநர் ஒருவர் மறக்கப்பட்ட பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலுமில்லம் பற்றிய கருத்தறிதலில் தன்னுடைய சிந்தனையை பகிர்ந்து கொண்டார்.
மாவீரர் நாள் தொடர்பில் ஈடுபாட்டைக் காட்டும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மறக்கப்பட்டுப் போகும் தமிழர் விடுதலைப் போராட்ட விழுமியங்களை மீட்டெடுத்து தொடர்ந்து பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருப்பதனை உணர்ந்து இனிவரும் காலங்களில் செயற்படுதல் ஈழத்தில் தமிழரின் இருப்பை உறுதி செய்யும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இறந்தவர்களை நினைவு கொள்ளல் என்பது தமிழர்களிடத்தில் உள்ள உயர் கலாச்சார பண்பாடு ஆகும்.












