அரசின் பழிவாங்கும் பட்டியலில் தனது பெயரும் உண்டு..! திலித் ஜயவீர பரபரப்பு குற்றச்சாட்டு
சில யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை துல்லியமாக அறியமுடிகின்றது என்றும், அவ்வாறு வெளியிடப்படும் எதிர்வுகூறல்களில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
நேற்று(29.06.2026) நடைபெற்ற கேகாலை மாவட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகக் கட்டமைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஊடகவியலாளர் ஹட்சன் சமரசிங்க நடத்திய காலை நேர நிகழ்ச்சியில் எதனைத் தெரிவிக்கின்றாரோ, அதுவே அன்றைய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்லது அரச வட்டாரத்தின் முடிவு என்பதை மக்கள் எளிதாகப் புரிந்துகொண்டார்கள்.
இன்று நாட்டின் ஊடகக் கட்டமைப்பு அதே பாணியிலேயே அரசால் கையாளப்பட்டு வருகின்றது.

தற்போது ஹட்சன் சமரசிங்க போன்றவர்கள் இல்லை. அதற்குப் பதிலாக 2 அல்லது 3 யூடியூப் சேனல்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளன.
அந்த யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது.
அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்
அரச மாளிகையில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே இந்த யூடியூப் சேனல்கள் ஊடாகத் தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. அவ்வாறு வெளியிடப்படும் எதிர்வுகூறல்களில் என்னுடைய பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அடக்குமுறை மற்றும் பழிவாங்கும் நடைமுறைகளை நேரில் அனுபவித்தவன் என்ற ரீதியிலும், அது குறித்த அரசியல் அறிவைக் கொண்டவன் என்ற அடிப்படையிலும் நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த அரசு இவ்வாறான பழிவாங்கும் கட்டமைப்பு மற்றும் ஊடக அடக்குமுறை இயந்திரத்தை எவ்வளவுதான் பயன்படுத்த முற்பட்டாலும் அதனை நீண்ட காலத்துக்குக் கொண்டு செல்ல முடியாது.
ஏனெனில், தற்போதைய ஆட்சியாளர்கள் குறிப்பிடும் 75 வருட சாபக்கேட்டு அரசியலில் எப்போதும் கடுமையான விமர்சனங்களுக்கும் மக்களின் எதிர்ப்புகளுக்கும் உள்ளான ஓர் அதிகார இயந்திரமே இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan