விமானப் பயணத்தின் போது மாயமான ஒஸ்கார் சிலையால் பரபரப்பு
"மிஸ்டர் நோபடி எகைன்ஸ்ட் புட்டின்" என்ற ஆவணப்படத்திற்காக இந்த ஆண்டு ஒஸ்கார் விருது வென்ற ரஷ்ய இயக்குனர் பாவெல் தாலன்கினின் ஒஸ்கார் சிலை, விமானப் பயணத்தின் போது மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க்கிலிருந்து ஜெர்மனிக்குச் சென்ற தாலன்கினை, அமெரிக்கப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஒஸ்கார் சிலையை விமானத்தின் கேபினுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
விமானத்தில் மாயம்
சுமார் 3.8 கிலோ எடை கொண்ட அந்தச் சிலையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறி, அதை விமானத்தின் சரக்குப் பெட்டிக்கு மாற்றும்படி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிலையைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு பெட்டியில் வைத்து விமானத்தின் அடிப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இயக்குனர் தாலன்கின் இறங்கியபோது, அந்த ஒஸ்கார் சிலை அடங்கிய பெட்டி அவரிடம் வந்து சேரவில்லை.
தனது முந்தைய பயணங்களில் எப்போதுமே இந்தச் சிலையைக் கையில் வைத்தே பயணம் செய்திருப்பதாகவும், தற்போது அதிகாரிகள் இதை ஒரு ஆயுதமாகக் கருதியது தனக்குப் புரியாத புதிராக இருப்பதாகவும் தாலன்கின் வேதனை தெரிவித்துள்ளார்.
ஒஸ்கார் சிலை
லுஃப்தான்சா விமான நிறுவனம் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், ஒஸ்கார் சிலையைத் தேடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்யப் பாடசாலைகளில் போருக்கு ஆதரவான கருத்துக்கள் எவ்வாறு மாணவர்களிடையே திணிக்கப்படுகின்றன என்பதை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2024-இல் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய தாலன்கின், தனது படைப்பிற்காகப் பெற்ற உயரிய விருது மாயமானதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்.