குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல் உத்தரவு
புதிய இணைப்பு
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த கால ரணில் அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலங்கையில் இணையவழி மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையிலான இடைக்காலத் தடைஉத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
உச்சநீதிமன்ற விசாரணை
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இலங்கையில் இணையவழி மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையில், ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை 2024 ஓகஸ்ட் 2ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுளளது.
குறித்த குற்றச்சாட்டில் இன்றைய தினம் ஹர்ச இலுக்பிட்டிய உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதன்போது அவரது சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், எனினும் முடியாது போய்விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரவு நடைமுறை
அத்துடன் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்த தனது கட்சிக்காரர் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் அவர் உறுதியளித்தார்.
எனினும் ஹர்ச இலுக்பிட்டிய முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டிருந்தாக மனுதாரர்களின் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரீதி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி, குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற மூவர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது
செய்தி - அஸ்ரப்
முதலாம் இணைப்பு
இன்று மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, நீதிமன்ற வளாக சிறையில் தடுத்து வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, இன்று (25.09.2024) காலையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம் சுமத்துவதற்கான விதியை, இலங்கை உயர் நீதிமன்றம் வெளியிட்டது.
அமைச்சரவை தீர்மானம்
அதேவேளை, இலங்கையில் இணையம் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையில், நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், முதலாவது பிரதிவாதியான இலுக்பிட்டிய, 2024 ஆகஸ்ட் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டார் என்பதே குற்றச்சாட்டாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |