எரிபொருட்களின் விலையை உயர்த்த நிதியமைச்சுக்கு மத்திய வங்கி பரிந்துரை- எதிர்கட்சி
மத்திய வங்கி புதுயான குறுகிய கால திட்டங்களை நிதியமைச்சுக்கு பரிந்துரைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய அவர், நாட்டில் எரிபொருட்களின் விலையை 35 ரூபா அளவில் உயர்த்தி, அதன் மூலம் எரிபொருள் கொள்வனவை குறைத்து, இறக்குமதியை குறைப்பதன் மூலம் கொள்வனவுக்கான நிதியை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பதே மத்திய வங்கி, நிதியமைச்சுக்கு வழங்கியுள்ள ஆலோசனையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
எனினும் இவ்வாறான குறுகிய கால திட்டங்களைக் கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று மரிக்கார் குறிப்பிட்டார்
மாறாக கடன் செலுத்தவேண்டிய தரப்புடன் பேசி, கடன் தவணைகளை நீடித்துக்கொள்வதன் மூலம் பொருளாதார சிக்கலை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனை விடுத்து பொருளாதாரம் தொடர்பாக பிட்ச் நிறுவனம் வெளியிடும் அறிக்கைகளுக்கு மறுப்பறிக்கை வெளியிடுவதன் மூலம் பொருளாதாரத்தை சீர்செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வெளிநாடுகளில் பணியாற்றுவோர் வங்கிகளின் ஊடாக பணம் அனுப்புவதைக் காட்டிலும் உண்டியல்கள் மூலம் பணம் அனுப்பினால் இலாபம் என்ற அடிப்படையில் பணம் அனுப்புவதை குறைத்துள்ளமையையும் மரிக்கார் சுட்டிக்காட்டினார்