இலங்கையின் திட்டமிடலை ஆதரிக்கும் எண்ணம் இல்லை: சுவிட்ஸர்லாந்து அதிரடி
இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான புதிய ஆணைக்குழுவை ஆதரிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, சுவிட்ஸர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஃபேபியன் மோலினா, எழுப்பிய கேள்வியின்போது இந்த பதிலை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான புதிய வழிமுறைகளை ஸ்தாபித்தல் தொடர்பாக இலங்கையுடன் சுவிஸ் அரசாங்கத்தின் ஈடுபாடு குறித்தே சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஃபேபியன் மோலினா இந்தக கேள்வியை எழுப்பினார்.
பொறுப்புக்கூறல் பொறிமுறை
சுவிஸ் அரசாங்கத்தின் கூற்றுப்படி, முன்னதாக இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம், தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பானிய தூதரகங்களுடன் இணைந்து, ரணில் விக்ரமசிங்கவிடம் நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளின் பட்டியலை முன்வைத்துள்ளது.
அத்துடன் இலங்கை சிறைகளில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் சித்திரவதைக்கு உள்ளவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் மனித உரிமை அமைப்புகளை சுவிட்சர்லாந்து ஆதரிக்கிறது என்றும் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு தமது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதுடன், எதிர்காலத்தில் சாத்தியமான பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்காக இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் "இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்துடன்" ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இலங்கையின் இடைக்கால செயலகம் அண்மையில் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் பிரதான பிக்குகளிடம் நல்லிணக்க சட்டமூலத்தை முன்வைத்தது.
இந்த சட்டமூலம் தமிழர் உணர்வுகளை கணக்கில் கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையிலேயே, பௌத்த மதகுருமார்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழு
எனினும் தமிழர்கள் சட்டமூலத்தை நிராகரித்து சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை கோரியுள்ளனர்.
இந்தநிலையில் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழு நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றும் மனித உரிமைகள் பேரவையின் ஆய்வுகளைத் திசைதிருப்பும் சட்டமியற்றும் சூழ்ச்சியாகத் தோன்றுகிறது என்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையகமும் கூறியுள்ளது.
இதேவேளை நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவளிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதைக் கண்டித்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு சந்திப்புகளில் அது குறித்து கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சுவிட்ஸர்லாந்தின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவில் இடம்பெற்றுள்ள ஃபேபியன் மோலினா, தாயகத்தில் உள்ள தமிழர்களைக் கலந்தாலோசிகாத "ஹிமாலய பிரகடனத்திற்கு" சுவிட்சர்லாந்தின் ஆதரவு தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதன்போது புலம்பெயர் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையிலான உரையாடல் மேடை மற்றும் பிரகடனத்திற்கு வழிவகுத்த விசாகா தர்மதாசவின் "போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்திற்கு" தமது வெளிவிவகார அமைச்சு நிதியுதவி வழங்கியுள்ளதாக சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
புகலிடக் கோரிக்கை
அதேநேரம், பிரகடனத்தின் முடிவில் இருந்து விலகியிருந்ததாகவும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் தடுப்புக் காவலில் மரணங்கள் பற்றிய புதிய அறிக்கைகள் இருந்தபோதிலும், தனிநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் விடயத்தில், புகலிடக் கோரிக்கைகள் அனைத்தும் தனித்தனியாக ஆராயப்படுவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 2023 இல், 61 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்,மேலும் 21 பேர் தாமாக முன்வந்து சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறினர் என்றும் சுவிஸ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |