சம்பள உயர்வை இரத்து செய்யும் விவகாரம்: பெரும் குழப்பத்தில் நாடாளுமன்றம்
நிதிச் சிக்கனத்திற்கு மத்தியில் மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு பெரும் விகிதாச்சாரத்தில் நடைமுறைப்படுத்திய சம்பள உயர்வை இரத்து செய்ய முடியுமா என்ற குழப்பத்தில் நாடாளுமன்றம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வங்கி அண்மையில் தனது ஊழியர்களின் சம்பளத்தை 29.53 வீதத்தில் இருந்து 79.97 வீதமாக மூன்று வருட சம்பள திருத்தத்தின் கீழ் அதிகரித்தது.
நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அதன் செலவுகளைச் சிக்கனமாக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் சவாலான விடயமாக இந்த விடயம் மாறியுள்ளது.
எழுத்துப்பூர்வ கோரிக்கை
இந்த சம்பள உயர்வுடன், மத்திய வங்கியின் கடமை ஆளுநரின் மாதாந்த சம்பளம் 974,965 ரூபாயில் இருந்து 1.7 மில்லியன் ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அபரிமிதமான சம்பள அதிகரிப்பு தொடர்பில் பரவலான விமர்சனங்களைத் தொடர்ந்து, இது தொடர்பில் நாடாளுமன்றத்தை தெளிவுபடுத்தவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி ஆளுநர் கடந்த 22ஆம் திகதியன்று எழுத்துப்பூர்வமாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதனையடுத்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், கட்சிகளின் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற அலுவல்கள் குழு, மத்திய வங்கி அதிகாரிகளை மார்ச் 5ஆம் திகதி வரவழைத்து இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளது.
பொது நிதி உரிமை
எனினும் மத்திய வங்கி ஒரு தன்னாட்சி அமைப்பு என்பதால், இந்த விடயத்தில் நாடாளுமன்றத்திற்கு எதுவும் செய்ய முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு பிரிவானது, பொது நிதி குறித்து முடிவெடுக்கும் முழு உரிமையும் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.
எனவே இது தொடர்பாக மத்திய வங்கியின் விவகாரங்களில் நாடாளுமன்றம் தலையிட முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |