எரிபொருள் அதிகரிப்பு: நாட்டு மக்களை ஏமாற்றும் அநுர அரசு- குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி தலைவர்
அரசால் அநீதியான முறையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட அறிக்கை ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை நேற்றைய தினம்(11.03.2026) வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை ஏமாற்றும் அரசு
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 அமெரிக்க டொலராகக் காணப்படும் நிலையில், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்புகளுக்கு மத்திய கிழக்குப் போர்ச் சூழலைச் சாட்டாகக் கூறி அதிக விலை அறவிடுவது ஊழல் நிறைந்த செயலாகும்.

விலை சூத்திரத்தைத் தமக்குச் சாதகமாக மாற்றி அரசு முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் தவறானது. எண்ணெய் விலை சடுதியாக உயர்வடைவதாகக் கூறி அரசு நாட்டு மக்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளது.
அதிகரித்த உலக சந்தை எண்ணெய் விலை சில மணி நேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
அரசின் இத்தகைய தன்னிச்சையான முடிவுகளால் நாட்டில் வறுமை அதிகரித்து வருகின்றது. சிறு தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சாதாரண வருமானம் ஈட்டுபவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இது மக்களின் வாழும் உரிமையையும், அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகும்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
70 டொலர் விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பீப்பாயின் விலையை அடிப்படையாகக் கொண்டே உள்நாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மக்களை ஏமாற்றும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த ஊழல் நிறைந்த விலை அதிகரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். வலுச்சக்தி பாதுகாப்புக்காக யதார்த்தமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
யதார்த்தமற்ற அடிப்படையில் இருந்து கொண்டு நாட்டை ஆள்வதை விடுத்து, மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த சுமையைக் குறைக்க அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam