தொழில் முயற்சியாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் காத்திருக்கும் வாய்ப்பு
தொழில் முயற்சியாளர்கள் புதுக்குடியிருப்பிற்கு வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்தார்.
நேற்று (23.02.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “வளமான நாடு, வளமான வாழ்க்கை” என்ற அரச கொள்கையின் கீழ் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த காணி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.
காணி வழங்கல்
அந்தவகையில் 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் விசுவமடு பகுதியில் 24 நபர்களுக்கு காணி வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதிய காணிகளை வழங்கும் காணிக்கச்சேரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 100 நபர்களுக்கு காணி வழங்கும் காணிக்கச்சேரி எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. இது மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் புதிய காணி வழங்கலில் முக்கியமான மைல்கல்லாக அமையும்.
பிரதேசத்தில் காணி இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கான காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயிர்செய்கைக்கான காணி இல்லாதவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதிகளவு காணிகளை பிடித்தவர்களை வெளியேற்றி உண்மையில் காணி தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்" என குறிப்பிட்டார்.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan