ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெறும் கலந்துரையாடல்
ஊடக அமைச்சினால் நியமிக்கப்பட்ட பன்முகக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேசிய ஊடகக் கொள்கையின் வரைவு (Zero Draft) தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று (21) திருகோணமலையில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) ஒத்துழைப்போடு இதனை சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வின் நோக்கம், மிகச்சரியான கொள்கைத் திட்டமொன்றை உருவாக்குவதற்கான விரிவான திருத்தங்களுக்கு தேவையான யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதாகும்.
முக்கிய கலந்துரையாடல்
தேசிய ஊடகக் கொள்கை ஒன்றின் அவசியத்தை சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement - FMM) 2017ஆம் ஆண்டிலேயே விரிவான ஊடகப் பரிமாற்றங்களுக்கு முன் திட்டமாக ஏற்றுக்கொண்டது.
அதேவேளை, கொழும்பு பிரகடனம் போன்ற முன்னோடி ஆவணங்களிலும் ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு வலியுறுத்தப்பட்டிருந்தன.
சில தரப்புகள் தேசிய ஊடகக் கொள்கையைப் பற்றி சந்தேகங்களையும் எதிர்ப்புகளையும் வெளியிட்ட போதிலும், சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடு என்னவெனில், பரந்தும் கலந்துரையாடல்களையும் உள்ளடக்கிய அடிப்படையில் முன்னெடுக்கப்படும் திருத்தங்கள் சிறந்ததும் தொழில்முறை சார்ந்த ஊடகத்திற்கான வழியையும் திறக்குமாதலால், இத்தகைய கலந்துரையாடல்களில் பங்குபெறுதல் அவசியம் என்பதே ஆகும்.











