வவுனியாவில் ஊடக அமைய அலுவலகம் திறந்து வைப்பு (Photos)
ஊடகவியல்துறை என்பது மிகப் பெரியதுறை, பல்வேறு உரிமை போராட்டங்களில் பங்கு கொண்டு அந்த உரிமைப் போராட்டங்களை
உலகிற்குக் கொண்டு வந்தவர்கள் ஊடகவியலாளர்களாக இருக்கின்றார்கள் என வவுனியா
பிரதேச செயலாளர் நா. தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தின் அலுவலக திறப்பு இன்று வவுனியா வைரவப்புளியங்குளத்தில் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ரெட்னகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சிறுவயதில் பல்வேறு புத்தகங்களைப் படிக்கின்ற போது நாடுகளின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் பிரதானமாக ஊடகவியலாளர்கள். ஊடகவியல் எவ்வாறு தோற்றம் பெற்றது என்றால் மன்னனுக்கும் மக்களுக்குமான ஒரு செய்தியைப் பரிமாறுகின்றவராகவும் அதேபோன்று நாட்டிற்கு நாடு செய்தியைப் பரிமாறுபவராகவும் ஊடகவியலாளர்கள் இருந்திருக்கின்றார்கள்.
பல்வேறு படுகொலைகள் அவ்வாறான துயரச்சம்பவங்கள் , நடைபெறுகின்ற போது அதை முழு உலகிற்கும் தெரியப்படுத்தி அந்த மக்களுக்கு நீதி கிடைக்கின்ற பாரிய பணியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஊடகவியலாளர்கள்.
தற்போது இந்த ஊடக அமையத்தில்
இருக்கின்ற ஊடகவியலாளர்களும் எதிர்காலத்தில் பல்வேறு பயிற்சிகளையும்
மேற்கொண்டு தேசியளவில் அல்லது சர்வதேச அளவில் பல மொழிகளில் பிரபல்யமடைந்து
ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதுகின்ற ஒரு விற்பன்னர்களாகவும் அவர்கள் உலகம்
அறிந்துகொள்ள வளர்ந்து தங்களது வயதுடன் சேர்த்து அனுபவங்களையும் பெற்று மேலும்
வளப்படுத்திக்கொண்டு இந்த நாட்டிற்கும், வன்னி மண்ணிற்கும் சேவையாற்ற
முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத் சந்திரவும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி .ரவீந்திரன் , வவுனியா பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கே.இராஜேஸ்வரன் , வர்த்தகர் சங்கச் செயலாளர் ஆ.அம்பிகைபாகன், காஞ்சனா நகையக உரிமையாளர் க.செல்வராசா ,மாவட்ட செயலக தகவல் உத்தியோகத்தர் உபுல் பாலசூரியவும் கலந்து கொண்டனர்.
வவுனியா ஊடக அமையத்திற்கான நிதி உதவி மற்றும் அலுவலக தளபாடங்கள் உட்பட பல்வேறு உதவிகளை அப்ரியல் அமைப்பின் பணிப்பாளர் ரவீந்திர டீ சில்வா வழங்கி வைத்தார்.









