மன்ராசி- ஊட்டுவள்ளி பாலம் உடைந்ததால் சுமார் 3000 பேர் வரை பாதிப்பு
மன்ராசி - ஊட்டுவள்ளி பாலம் உடைந்து போனதில் ஆறு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 3000 பேர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அங்கு வாழும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஊட்டுவள்ளி, வெங்கட்டன் கொடமல்லி, பச்சபங்களா, நல்லதண்ணி, உருலேக்கர் உள்ளிட்ட ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் என பலரும் இந்த பாலத்தினையே தமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் கடந்த 27ஆம் திகதி ஆக்கர ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக குறித்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கோரிக்கை
பாடசாலை செல்லும் மாணவர்கள், வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள், அன்றாட தேவைகளுக்காக மன்ராசி, டயகம அக்கரபத்தனை, தலவாக்கலை, லிந்துலை, நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்லும் சுமார் ஆயிரக்கணக்கான பொது மக்கள் குறித்த பாலம் உடைந்து போனமையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனினும் குறித்த தற்காலிக பாலத்தில் மழை நேரங்களில் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதனாலும், நீண்ட காலம் பயன்படுத்துவது அபாயம் என்பதனாலும் இதற்கான நிரந்தர தீர்வொன்றை தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் இது குறித்த கவனம் எடுத்து இந்த பாலத்தினை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.