நிதி அமைச்சில் ஹேக் செய்யப்பட்ட பெருமளவு பணத்தில் 200 டொலர்கள் மாத்திரம் மீட்பு
நிதி அமைச்சின் கணினி அமைப்பின் இணையவழிப் பாதுகாப்பு ஊடுருவலைத் தொடர்ந்து, ஹேக்கர்களினால் மோசடி செய்யப்பட்ட 2.5 மில்லியன் டொலர் தொகையில் இருந்து வெறும் 200 டொலர்கள் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செய்தியை வாரஇறுதி ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் திறைசேரியிலிருந்து வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போன நிதியைக் கண்டறிய, இலங்கை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் உதவி கோரியிருந்தனர்.
வெளியான செய்தி..
பணத்தின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலாவரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலும், மற்றொரு பகுதி வேறு ஒரு மாநிலத்தில் உள்ள வங்கியிலும் வைப்பிலிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், டெலாவர் பிராந்திய வங்கிக் கணக்கு காலியாக இருந்ததாகவும், இரண்டாவது கணக்கில் 200 அமெரிக்க டொலர் மட்டுமே இருந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்குத் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட தொகை, விரைவில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 25 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.