நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் எவரும் கைதாகவில்லை: நிஹால் தல்தூவ தகவல்
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம், அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர்
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இந்த சட்டத்தின் கீழ் கைதானதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாணந்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த சட்டத்தில் கைதான முதல் நபர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல்வாதி ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏனைய அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த நபர் சேறு பூசி வந்தார் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களை பிழையாக பயன்படுத்துவோர்
சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு பிரிவினர் எவரையும் இதுவரையில் கைது செய்யவில்லை என நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |