ஒன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு : இந்தியாவில் இலங்கையரின் செயல்
ஒன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடலூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுநரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த இலங்கையர் ஒருவரை இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருஞ்சிப்பாடியைச் சேர்ந்த 32 வயதான எஸ். சம்பத் என்ற முறைப்பாட்டாளருக்கு டெலிகிராம் செயலி மூலம் ஒன்லைன் பகுதி நேர வேலை வழங்கப்படுவதாக குறுந்தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இணையம் மூலம் குறிப்பிட்ட பணிகளை முடிப்பதற்கு பணம் வழங்கப்படும் என அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமளவு வருமானம்
சிறிய முதலீட்டில் இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பெருமளவு வருமானத்தை பெற முடியும் என சந்தேக நபர் உறுதியளித்துள்ளார்.
பின்னர், சம்பத் என்ற நபர் ஒரு பெரிய டெலிகிராம் குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைய வங்கிக் கணக்கில் 60 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பு செய்துள்ளார்.
இறுதியாக, பணத்தை மோசடி செய்தவர்களிடம் இழந்ததை அடுத்து, இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை நடத்தியது. இதன்போது குழு கடைசியாக கணக்கு வைத்திருப்பவருக்கு 6 லட்சம் பரிவர்த்தனை செய்தமை மற்றும் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்கு விவரங்களையும் பெற்றனர்.
ஒன்லைன் மோசடி
வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் விபரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
குறித்த கணக்கு சென்னை அம்பத்தூரில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சல்மான் முகமது பாரூக் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இந்த ஒன்லைன் மோசடியின் தலைவன் சீனாவைச் சேர்ந்தவர் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வைத்து சல்மானை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை கடலூருக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |