வெங்காயத்தால் ஏற்பட்ட சிக்கல்: கவலையில் விவசாயிகள்
வெங்காயச் செய்கையில் இப்போது அறுவடை காலமாகும். சந்தைப்படுத்தலின் போது வெங்காயத்தின் விலை குறைந்து விட்டதால் நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு என்ற கருத்தும் விவசாயிகளிடையே பரவலாக இருப்பதனையும் அவதானிக்க முடிந்தது.
வெங்காயச் செயற்கையானது குறைந்த காலத்தினுள் அறுவடை செய்து சந்தைப்படுத்தக்கூடிய குறுங்காலப் பயிராகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வெங்காயச் செய்கையில் விதைப்பு
வெங்காயம் என்பது உணவை சுவையூட்ட பயன்படும் ஒரு வகை சுவைச்சரக்குப் பயிராகும். வெயில் அதிகமாகவும் மழைவீழ்ச்சி குறைவாகவும் உள்ள காலங்களுக்குப் பொருத்தமான பயிராக இருக்கின்ற போதும் பயிரிட்ட நிலம் எப்போதும் ஈரமாக இருப்பது பயிரின் வளர்ச்சியை அதிகமாக்கி விளைச்சலை அதிகமாக்கி விடும்.
நடுகைக்கான (நடுக்கைக்காய்) வெங்காயம் ஒரு அந்தர் (50kg) இருபதாயிரம் வரை சென்றது. ஒரு கிலோகிராம் நடுகைக்காய் ரூபா 400 வரை விற்பனையானது.
நிலப் பண்டுத்தல் மற்றும் நடுகைக்கூலி, மருந்து பசளை என இரண்டு ஏக்கர் வெங்காயச் செய்கைக்கு ஒன்றரை லட்சம் வரை தனக்கு செலவானதாக ஒட்டுசுட்டானில் வெங்காயத்தை பயிட்ட விவசாயியொருவர் குறிப்பிட்டிருந்தார்.
வெங்காயச் செய்கையில் பாத்திமைப்புக்கு மட்டுமே ஆண் தொழிலாளரை ஈடுபடுத்த வேண்டும். ஏனைய எல்லா வேலைகளையும் பெண் தொழிலாளர்களை கொண்டே செய்து முடிக்கலாம்.
ஒரு பெண் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு இரண்டாயிரம் வரை கூலி கொடுப்பதாகவும் அவர் மேலும் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
வெங்காயம் பயிரிட்ட நிலத்தில் வெங்காய அறுவடையின் பின்னர் பெரும்போக நெல் விதைப்புக்காக நிலத்தை தயார்படுத்தி நெல் விதைத்திருப்பதையும் எடுத்துரைத்திருந்தார்.
வெங்காயச் சந்தைப்படுத்தல் சவால்கள்
அறுவடையான வெங்காயத்தை வியாபாரிகள் வந்து கொள்வனவு செய்வதாகவும் வெங்காயத்திற்கான பணத்தை காலம் தாழ்த்தி தருவதாகவும் சில விவசாயிகள், வியாபாரிகள் மீது குறைப்பட்டுக் கொண்டதையும் சில இடங்களில் முன்பணம் கொடுத்து வெங்காயத்தை கொள்வனவு செய்வதையும் அவதானிக்க முடிகின்றது.
தற்போது வெங்காயக் கொள்வனவு விலையாக ரூபா 200 தொடக்கம் ருபா 250 வரை போகிறது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த வெங்காயக் கொள்வனவாளர்கள் குறிப்பிட்டனர்.
வெங்காயச் செய்கையில் எப்படி இலாபம் என்ற கேள்விக்கு கையும் கணக்கும் சரியாகப் போகிறது என்றும் கூலி, பசளை, மருந்து எல்லாம் விலை கூடியதால் அதிக இலாபம் பெறமுடியாது என விபரித்தனர் பல வெங்காயச் செய்கையாளர்கள்.
யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பெருநிலப்பரப்பெங்கும் வெங்காயம் நன்கு விளையக்கூடிய அதிகம் இலாபம் தரக்கூடிய பயிராகும். நீண்ட காலத்திற்கு பேணி வைத்து சந்தைப்படுத்த முடியும்.
ஆனாலும் நாட்கள் செல்லச் செல்ல வெங்காயத்தின் திணிவு குறைந்து செல்லும் அபாயம் இருக்கிறது. அதனையும் கருத்திலெடுத்தல் வேண்டும் என யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் பகுதியில் மரக்கறி வியாபாரியொருவர் குறிப்பிட்டார்.
தின்னவேலிச் சந்தைக்கும், தம்புள்ளை சந்தைக்கும் மரக்கறிகளை தேவைப்பாட்டுக்கேற்ப கொண்டுசென்று விற்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எதிர்பாராத மழையினால் சந்தைப்படுத்தல் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
ஒரு மீள் பார்வை
கூலி, மருந்து, பசளை மற்றும் விதைகாய், அறுவடை என்பவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கும் போது அறுவடையை சந்தைப்படுத்தும் வேளை குறைந்த கொள்ளவிலை கிடைக்கிறது என்பவற்றால் வெங்காயச் செய்கையில் பெரியளவில் இலாபம் இல்லை.
கட்டாய கழிவு முறைமையும் தம்மை அதிகளவில் பாதிக்கின்றது என்ற இந்த கூற்றுக்களையே அதிகமான விவசாயிகளிடமிருந்து பெறமுடிகிறது. அறுவடையின் பின்னர் வெங்காயத்தை சீர் செய்வதற்கும் அவற்றை பேணிப் பாதுகாப்பதற்கும் மேலதிக செலவுகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறினார்கள்.
பொருத்தமான சந்தைப்படுத்தல் வசதிகள் மேம்படுத்தப்பட்டால் வெங்காயச் செய்கையால் விவசாயிகள் இலாபடைவதோடு ஏனையோரும் இலாபமடையும் வகையில் புதிய முன்மொழிவுகள் அவசியமாகின்றன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மருந்து மற்றும் பசளைப் பாவனைகளால் ஏற்படும் அதிக செலவினங்களை குறைப்பதற்கு மாற்றுவழிகளை தேடுவதோடு இரசாயன பசளைகளின் பாவனையை குறைத்துக் கொள்ளவும் முயலலாம் என்பதும் விவசாய முன்னோடிகளது கருத்தாக இருக்கின்றது.
விவசாயிகளுக்கு கமக்கார அமைப்புக்கள் மற்றும் விவசாயம் சார்ந்த அமைப்புக்களது ஆதரவும் வழிகாட்டலும் போதியளவில் கிடைப்பதில்லை என்பதும் இங்கே கவலைகொள்ளத்தாக்க விடயமாகும்.
கட்டாய கழிவு கொள்வனவு முறை
செலவுகள் அதிகமான போது கொள்விலை மற்றும் சந்தைப்படுத்தும் விலைகளுக்கிடையில் பெரிய வித்தியாசம் பேணப்படுதல், வெங்காயத்தை கொள்வனவு செய்யும் போது கழிவு என குறிப்பிட்டளவு கழித்துக் கொள்வது (50kgக்கு 5kg கழிவு என கொள்வனவு செய்யும் போது ஒரு அந்தர் வெங்காய விற்பனையில் 55kg வெங்காயத்தை கொடுத்து 50kg வெங்காயத்திற்கு பணத்தைப் பெறுகின்றனர்.
இதனால் பதினொரு அந்தர் வெங்காயத்தை கொடுக்கும் ஒரு விவசாயி ஒரு அந்தர் வெங்காயத்தை பணமின்றி கொடுக்க வேண்டியுள்ளது.
இது தமக்கு பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்துகின்றது என விவசாயிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
அண்மையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலிலும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இப்படி விவசாயப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பெறப்படும் கட்டாய கழிவு முறையை தவிர்க்க வேண்டும் என சுடடிக்காட்டியிருந்தமையும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.
வியாபாரிகள் தாங்கள் நட்டமடைவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த கட்டாய கழிவு முறைமையை பேணி வருகின்றனர் என்பதையும் வியாபரிகளுடானான உரையாடலில் இருந்து அறிய முடிந்தது.
இந்த முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதையும் கொள்வனவின் போது இருக்கும் திணிவுக்கே பணம் செலுத்த வேண்டும் என்பதையும் விவசாயிகள் சார்பாக ஏற்றுக்கொள்ளும் போதும் வியபாரிகள் சார்பாக இந்த அணுகுமுறைக்கு உடன்பாடில்லாமையையும் அறிய முடிகிறது.
வடக்கில் பல விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்த போதும் அவர்களால் தங்கள் வறுமையை ஒழிக்க முடியவில்லை.
ஆனாலும் அத்தகைய விவசாயிகளிடம் அறுவடைகளை வாங்கி சந்தைப்படுத்திய வியாபாரிகள் அதிக இலாபமீட்டி வசதியாக வாழ்கின்றனர் என்பதும் நேக்கப்பட வேண்டிய ஒன்றே!
உணவை உற்பத்தி செய்யும் உழவாளி உலகுக்கு உயிர் கொடுக்கும் கடவுள் என்று
சொன்னால் மிகையொன்றில்லை காண்.



படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
