ஒரு சட்டமும் இரண்டு மனிதர்களும்
“மனுசி பிள்ளையள் யாரும் என்னோட கதைக்கிறதில்ல. அவங்கள் கதைக்காமல் விட்டதிலயும் நியாயமிருக்கு. எனக்கும் அவங்களிட்ட என்னத்த கதைக்கிறதெண்டு தெரியேல்ல. எந்த முகங்கொண்டு என்ர பிள்ளைகள பார்க்கிறதெண்டும் விளங்கேல்ல” இப்படியே தன் தற்போதைய வாழ்க்கை நிலையை விளக்குகிறார் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி செல்வரத்தினம் (பெயர்மாற்றப்பட்டுள்ளது).
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகக் சிறையிலடைக்கப்பட்டிருந்த செல்வரத்தினம் தன் 71 ஆவது வயதில் விடுதலை செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் வயதால் முதியவர் செல்வரத்தினம்.
விசாரணை
“எழும்பி நடக்கவே முடியுதில்ல. கொஞ்சம் நடந்தாலே மூச்சிழைக்குது. நான் கடைசி காலம் வரைக்கும் இவயளின்ர தயவிலதான் வாழவேணும். செத்தாலும் இவங்கள்தான் அடக்கம் செய்யவேணும். என்னால தனிய எதுவும் செய்யமுடியிறதில்ல. இப்பிடியே பாரமா இருந்திட்டு சாகவேண்டியதுதான் ” எனச் செல்வரத்தினம் தன் வயோதிபக் குரலில் சொல்லும்போது, அவரது வயதை மீறிய குரல்தளர்வை உணரமுடிகிறது.
அந்தக் குரல் தளர்வில், ஏக்கம், கவலை, விரக்தி, பயம், துயரம் என மனித வாழ்வின் அத்தனை அவலப் பக்கங்களும் நிறைந்திருக்கின்றன.
“சண்டையில் எல்லாத்தையும் இழந்திட்டு, ஒரு சொப்பிங் பையோடதான் முகாமுக்குப் போனம். அங்க வச்சி பிடிச்சவங்கள். ரெண்டு நாள் விசாரணைக்குப் பிறகு விட்டவங்கள். கடந்த 2010ஆம் ஆண்டு மீளக்குடியேற்றப்பட்டம். மீள்குடியேறி சிலநாள் கடந்தது.
நானும், மனுசி பிள்ளைகளும் வாழ்க்கைய புதுசா தொடங்கவேண்டியிருந்தது. வீடெல்லாம் புதுசா கட்டவேண்டியிருந்தது. அந்நேரந்தான் ரீ.ஐ.டி ஆக்கள் வெள்ளவானில வந்து, விசாரணையொன்று இருக்கு எண்டு கூப்பிட்டிச்சினம்.
நான் எந்தக் குற்றமும் செய்யேல்ல. என்னை விசாரியுங்கோ என்று வாகனத்தில் ஏறிப்போனன். நான் இயக்கத்தில இருக்கேல்ல. எந்த ஆயுதங்கள் பற்றியும் தெரியாது. ஆனாலும் 12 வருசம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ சிறையில் இருந்தன்... ” “..மீள்குடியேறி குடும்பத்த வீட்ட பிள்ளைகள் நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அது எதையும் செய்யாமல் 12 வருசங்கள் சிறைக்குள்ள துலைச்சன்.
பிள்ளைகள் தாங்களே வளர்ந்து, படிப்பையும் விட்டு, கூலி வேலையும் செய்து வாழ்க்கைய வாழ்ந்துகொண்டிருக்கினம்.
நான் எதையுமே அவைக்கு செய்யேல்ல. இந்தக் கோபத்தில அவை இருக்கினம். அதேமாதிரி எனக்கும் பெரிய குற்றவுணர்ச்சி இருக்கு.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கை
உயிரோட இருந்தும் என்ர குடும்பத்துக்கு என்னால எதையும் செய்யமுடியேல்ல. வாழ்க்கையின்ர கடைசிக் கட்டத்தில பிள்ளையளிட்ட வந்திருக்கிறன். எனக்காக வழக்காடின லோயர் அய்யா தந்த காசில பஸ்ல தான் ஊர்திருப்பி வந்தன்... ” கொடியதொரு சட்டம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் சிதைத்திருக்கிறது என்பதற்கு இறுதிச் சாட்சியாக இருக்கிறார் செல்வரத்தினம். அவரின் புகைப்படத்தையோ, சொந்தப் பெயரையோ வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை.
பாரதூரமான குற்றங்கள் எதிலும் ஈடுபடாவிட்டாலும் பன்னிருவருட சிறைவாசம் குறித்த அச்சம் இந்த முதுமையிலும், வாழ்வின் இறுதி அந்தத்திலும் தொடர்வதை, தொங்கிக்கொண்டிருப்பதை அவருடனான உரையாடல் முழுவதிலும் அவதானிக்கமுடிந்தது.
இந்த உரையாடலில் மெய்மறந்தேனும் சிறையிருப்பில் தன் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் பற்றியோ, அதற்கான தண்டனைகள் பற்றியோ அவர் வாய் திறக்கவில்லை.
ஏனெனில் செல்வரத்தினம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி.
அவர் குற்றமற்றவர் என விடுதலையே ஆகியிருப்பினும், தன் மிகுதி வாழ்நாளை மிகக் கவனமாகக் கடக்கவேண்டும்.
அவர் பேசும் வார்த்தைகளுக்கு மிகக் கவனமாக சுயதணிக்கை செய்துகொள்ளவேண்டும்.
ஏனெனில் அவருக்காகவோ, அவரின் விடுதலைக்காகவோ யாரும் கூட்டுப் பிரார்த்தனை செய்யார். மக்களாகத் திரண்டு வந்து அவரின் விடுதலைக்காகப் போராடமாட்டார்.
பயங்கரவாத தடை சட்டம்
விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தவிர அவரது குடும்பத்தாருக்கு உதவியாக இருக்க யாருமிருக்கமாட்டார். அவர்களது தொலைபேசி அழைப்புக்களுக்கு செவிமடுக்கக்கூட அனேகர் விரும்பமாட்டார். சமூகப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், புத்தீசீவிகள் தூதரகங்களுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் அழுத்தம் பிரயோகிக்கமாட்டார்.
சிவில் சமூக அமைப்புகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தாலும், பாதிக்கப்பட்டவர்களது குடும்ப உறவினர்களைத் தவிர வேறு எத்தரப்பையும் காண்பதரிது. தமிழ் அரசியல் கைதியின் குடும்பத்தின் ஒரு வழிப் பயணத்துச் செலவைத் தாங்கிக்கொள்ளக்கூட இந்தச் சமூகம் கூட்டாகத் திரண்டு வருவதில்லை.
இத்தனை துயரங்களும், அச்சங்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாலானதுதான். ஏனெனில் அந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுபவர்களுக்கு விடுதலை என்பது மிகுந்த தொலைவானது. அது தரும் அச்சம் தலைமுறைகள் கடந்த வலியை ஏற்படுத்துவது.
கடந்த ஆண்டு வரைக்கும் இந்தப் பெருவலியை தமிழர்களும், முஸ்லிம்களுமே அனுபவி்த்தனர்.
தெற்கில் ஏற்பட்ட பசிப்பயத்தின் விளைவான சிங்கள மக்களின் போராட்டமானது பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த அச்சத்தை அவர்கள் மத்தியிலும் ஏற்படுத்திவிட்டது.
வேலியே பயிரை மேயந்த கணக்கில், அரகலயகாரர்களை நோக்கி வீசப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தன் சொந்த இனத்தையே வேட்டையாடியது.
அந்த வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி 167 நாட்கள் தடுத்துவைக்கப்பட்ட வசந்த முதலிகே அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
விடுதலையானதும் அவரை மொத்த சிங்கள சமூகத்தினரும் கொண்டாடினர். ஆரவாரித்து வரவேற்றனர். அவரது விடுதலைக்காகப் போராடிய சட்டத்தரணியை தம் தோள்மீது சுமந்தனர். வசந்தவின் விடுதலைக்காக ஒரு தொகுதி சிங்கள இளையோர் இரவு, பகலாகப் போராடினர்.
அதே இளைஞர்கள் அவரின் விடுதலையின் பின்னரும் தாங்கிக்கொண்டனர். வசந்தவும் விடுதலையான மறுநாளே ஊடகங்களைச் சந்தி்த்தார்.
அந்த ஊடகச் சந்திப்பின்போது வசந்த முதலி்ல் தன்னைத் தெளிவாக அடையாளம் காட்டிக்கொண்டார்.
முதலில் தனக்கு இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் எப்படியான மனிதவுரிமை மீறல்களைச் செய்தது என்பதையே உலகிற்கு வெளிப்படுத்தினார்.
பேலியகொட விசேட பொலிஸ் பிரிவின் ஏ.எஸ்.பி மஹிந்த விலோ ஆராச்சி என்பவரே எம்மைக் கைதுசெய்தார்.
பிடியாணை எனக் கூறி என்னைக் கைது செய்த அவர் பேலியகொட பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு எந்த விடயத்தையும் தெளிவுபடுத்தாமல் பொலிஸ் நிலையத்துக்குள் மறைத்து வைப்பதைப்போன்று தடுத்துவைத்திருந்தனர்.
மறுநாள் காலை விடிவதற்குள் யாரும் நித்திரையால் கண்விழிப்பதற்கு முன்னர் சிவில் உடையி்ல், துணியொன்றினால் என்னை மூடி, எந்தேரமுல்ல பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர்.
எந்தேரமுல்ல பொலிஸ் நிலைய ஏ.எஸ்.பி மஹிந்த விலோ ஆராச்சி என்பவர் மேசை மீது அமர்ந்து துப்பாக்கியை எனது பக்கம் திருப்பி, விஜயவீரவிற்கு நடந்து உனக்கு நினைவிருக்கிறதா? விஜயகுமாரதுங்கவுக்கு நடந்தது உனக்கு நினைவிருக்கிறதா? அதனையே உனக்கும் செய்யவேண்டியுள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில் உன்னைக் கொலைசெய்யமாட்டோம். இரண்டு வருடங்கள் சிறையில் இருந்து வருமாறு ஏ.எஸ்.பி.மஹிந்த விலோ ஆராச்சி கூறினார்.
பின்னர் அங்கிருந்து எம்மை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, எவருக்கும் தெரியாதவகையில், கரையோர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் விடுதிக்கு அழைத்துச்சென்றனர்.
பொலிஸ் விடுதியின் கீழ் மாடிக்குள் இருள் அறையொன்றுக்குள் விசாரணைகள் ஏதுமின்றி துணியால் சுற்றி எம்மைப் பல மணித்தியாலங்கள் வைத்திருந்தனர்.
நாம் சட்டத்தரணிகளையோ சிவில் சமூகத்தினரையோ சந்திக்க முடியாதவாறு, மனிதவுரிமை ஆணைக்குழுவினர் எம்மை சந்திக்கவரும்போது, எம்மை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டனர் எனக் கூறுவதற்கேற்ப அனைத்து விடயங்களும் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் திட்டமிடப்பட்டன.
21 ஆம் திகதி காலை பொலிஸார் என்ன செய்தார்கள் என்றால், எம்மை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, நவகமுவ ஆலயத்துக்கு அருகில் உள்ள வாகனத் தரிப்பிடத்திற்குக் கொண்டு சென்றனர். சுமார் பத்து அடி இறங்கியதும் உள்ள பாழடைந்த ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்றனர்.
ஆற்றங்கரைக்கு எம்மை அழைத்துச் சென்று துணியால் சுற்றி, கைவிலங்கிட்டு, சுற்றிவர ஆயுதங்களை போட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர் தொலைபேசியில் உரையாடினார்.
“சேர், நாம் அந்த இடத்துக்கு வந்துள்ளோம். என்ன செய்யவேண்டும் எனக் கேட்டார்.. ”
“சந்தேகத்துக்கு இடமான வாகனமொன்று நவகமுவ ஆலயத்தின் வாகனத்தரிப்பிடத்திற்கு ஆற்றங்கரைக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, நவகமுவ ஆலயத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், ஏன் இந்த வாகனம் இங்கிருக்கிறது எனப் பார்த்தார்.”
அவர் வரும்போது எம்மை அவ்விடத்திற்கு கொண்டு சென்ற பொலிஸார் என்ன கூறினர், அடே அவன் வருகிறான். அவன் இங்கு வரும்முன்னே விரட்டியடி என்றார்.
அங்கிருந்த அதிகாரி ஒருவர், கடந்த காலத்தில் பாதாள உலகக் கோஸ்டியில் பிரபலமாகியிருந்த பலரை இவ்வாறே கொலைசெய்வோம் எனக்கூறினார்.
குறிப்பாக மாக்கந்துரை மதூஸின் பெயரைக் கூறி மதுஸை இவ்வாறே கொலைசெய்தோம் எனக்கூறினார்.
தடுத்துவைக்கப்படிருந்தபோது நாம் இவ்வாறு திட்டமிட்டோம் எனக்கூறினோர். சி.சி.டி.வி இல்லாத இடத்தை இவ்வாறே நாம் கண்டுபிடித்தோம் என்றார். நாம் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தினோம். அதிகம் சத்தமிடவேண்டாம் என்றார்.
” இவ்வாறு நீண்ட வசந்த முதலிகேயின் முதல் ஊடகச் சந்திப்பில் எவ்வித ஒளிவுமறைவும் இருக்கவில்லை.
கோரமான சித்திரவதைகளுக்கும் கொடூரான படுகொலைகளுக்கும் பெயர்பெற்ற அரசின் முன்பாக நின்று பேசுகிறேன் என்கிற அச்சம் துளியளவும் அவரிடமிருக்கவில்லை.
இந்தத் துணிவை தந்தது எதுவெனில், தான் ஒரு பெரும்பான்மையினன் என்கிற மனநிலைதான். தன்னைச் சுற்றி வலுவான மனிதநேயமிக்க சக்தியொன்று பாதுகாப்பிட்டு நிற்கின்றமைதான்.
அந்த சக்தியின் பின்னால் கூட்டு சிங்கள சமூகமும் அணிதிரண்டு நிற்கிறது என்கிற நம்பிக்கையே வசந்தவிற்கு ஆத்மபலத்தைக் கொடுக்கிறது.
ஆனால் தமிழர்க்கு..? செல்வரத்தினம் மாதிரியானவர்களுக்கு? எனவேதான் இந்நாட்டின் கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம்கூட இருவேறு முகங்களுடையது எனச் சொல்லவேண்டியுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
