ஒரு நாடு - ஒரு சட்டம்! கட்டுப்படுவாரா ஞானசார தேரர்?
கடந்த 2016 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினம் ஒன்றில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை சம்பந்தமாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு (Gnanasara thero) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
இந்த வழக்கை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை குறித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெந்தி முன்னிலையில் ஆராயப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில், வழக்கை தாக்கல் செய்துள்ள அசாத் சாலி உட்பட சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிம்னறத்தில் முன்னிலையாகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்கின் கணனி சாட்சியங்களை ஆராயவதற்கான அனுமதியை கோரியதுடன் நீதிபதி அதற்கான அனுமதியை வழங்கி வழக்கை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார்.
ஒரு நாடு - ஒரு சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக ஞானசார தேரர் பதவி வகிக்கும் போது இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
