வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவு! இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர்
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கங்கன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகமவின் கெண்டலந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போதைப்பொருள் கையிருப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய உளவுத்தகவல்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேஷ நடவடிக்கைப்பிரிவு III அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத்தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் 59 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 800 'எக்ஸ்டஸி' வகை போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹோமகம பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'கங்கன' என்பவரின் நேரடி உத்தரவுகளின் கீழ், இவர் நாட்டில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இரகசியமாக இயக்கி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.