எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து நடைமுறை
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய போக்குவரத்து புதிய போக்குவரத்து நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பஸ் முன்னுரிமை ஒழுங்கை விதிமுறைகளை செவ்வாய்க்கிழமை முதல் பொலிஸார் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 7 பஸ் முன்னுரிமை ஒழுங்கைகளை உள்ளடக்கிய இந்த வேலைத்திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும் பயணிகள் பாதுகாப்பாகவும் உரிய நேரத்திலும் தங்கள் இடங்களைச் சென்றடைவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என மெட்ரோ பஸ் தலைவர் எஸ்.எம்.யு.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்குப் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, செப்டம்பர் 29ஆம் திகதி முதல் மெட்ரோவினால் இயக்கப்படும் 104 சொகுசு பஸ்களும் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பஸ் முன்னுரிமை ஒழுங்கைகள் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் செயற்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
குறித்த நேரங்களில், ஏனைய வாகனங்கள் பஸ் முன்னுரிமை ஒழுங்கைகளில் பயணிக்கவோ அல்லது வாகனங்களை நிறுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டாது.
அவசரநிலை அல்லது விபத்துக்களைத் தவிர்ப்பதற்கும், கடுமையான நெரிசலைக் கையாளுவதற்கும் அல்லது அவசியமான இடங்களில் திரும்புவதற்கு மாத்திரமே ஏனைய வாகனங்கள் இந்த ஒழுங்கைகளுக்குள் நுழைய முடியும்.
இந்த ஒழுங்கைகளை மெட்ரோ பஸ்கள் மாத்திரமன்றி ஏனைய பயணிகள் போக்குவரத்து பஸ்களும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல எச்சரித்துள்ளார்.
அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!