அரசியல் மாற்றம் குறித்து அநுரவுக்கு மத்திய வங்கி வழங்கியுள்ள அறிவுரை
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் திறன் மத்திய வங்கியின் பணவியல் கொள்கையில் இல்லை என்றும், அது நாடாளுமன்றத்தின் அரசியல் ரீதியிலான கட்டமைப்பு மறுசீரமைப்புகளிலேயே தங்கியுள்ளது என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிதிக்குழு (CoPF) கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார உற்பத்தி திறனை 6-7 வீதம் வரை உயர்த்த வர்த்தகம், முதலீடு, சுங்கம், காணி சந்தை மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் அவசியம் எனக் கூறினார்.
நாட்டின் தற்போதைய வளர்ச்சி திறன் 4-5 வீதமாக உள்ள நிலையில், அதை செயல்படுத்துவதே மத்திய வங்கியின் பணி என்றும், திறனை விரிவாக்குவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முக்கிய துறையில் மாற்றம்..
அத்துடன், கடந்த 20 ஆண்டுகளாக ஏற்றுமதித் துறை சுருங்கி, வர்த்தகமற்ற துறை விரிவடைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் கடன் வாங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும் என எச்சரித்தார்.

இந்தக் கருத்துகளை வரவேற்ற நிதிக்குழுவின் தலைவரும் எதிர்க்கட்சி எம்பியுமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பொருளாதார மாற்றங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அரசாங்க தரப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, சிறு தொழில்கள் மற்றும் பொருளாதார மண்டலங்கள் மூலம் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.