ஓமந்தையில் தனிநபரின் காணியினை அபகரிக்க முயற்சிக்கும் பொலிஸார் : வவுனியா பிரதேச செயலாளர் அதிரடி உத்தரவு
வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை பொலிஸார் ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த காணிக்குள் நுழைய பொலிஸாருக்கு வவுனியா பிரதேச செயலாளரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஓமந்தைப் பொலிஸ் நிலையத்திற்கு என பிறிதொரு இடத்தில் காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டுள்ளனர்.
குறித்த காணிக்கு அருகில் இருந்த தனிநபர் ஒருவரின் காணியையும் அபகரித்துள்ள பொலிஸார் அதனை துப்பரவு செய்து கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
காணிக்குள் நுழைய தடை
இது தொடர்பில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும், அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனையும் மீறி இன்றைய தினமும் (07.07) பொலிஸார் குறித்த காணிக்குள் சென்று துப்பரவு பணிகளில் ஈடுபட்ட போது காணி உரிமையாளரும் வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் சென்று பொலிசாருடன் முரண்பட்டிருந்ததுடன், அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த காணிக்குள் ஓமந்தைப் பொலிஸார் நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபனால் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

