இஸ்ரேல் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்
லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய இராணுவம் சட்டவிரோதமாக 'வெள்ளை பொஸ்பரஸ் ' (White Phosphorus) இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மார்ச் 3ஆம் திகதி, தெற்கு லெபனானில் உள்ள யஹ்மோர் (Yohmor) நகரில் உள்ள வீடுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
பொஸ்பரஸ் குண்டு
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஆய்வு செய்த மனித உரிமைகள் கண்காணிப்பகம், வான்வெளியில் வெடித்துச் சிதறும் பொஸ்பரஸ் குண்டுகளால் வீடுகளும் வாகனங்களும் தீப்பற்றி எரிவதை உறுதி செய்துள்ளது.

வெள்ளை பொஸ்பரஸ் காற்றில் பட்டவுடன் தீப்பிடிக்கக் கூடியது இது மனித உடலில் பட்டால் எலும்பு வரை ஊடுருவி கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தும்.
இது வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுக்களையும், மரணத்தையும் விளைவிக்கக் கூடியது சர்வதேச மனிதநேய சட்டத்தின்படி, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது.
தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தாலும், மக்கள் வாழும் பகுதிகளில் இத்தகைய கொடிய இரசாயனத்தைப் பயன்படுத்துவது பொதுமக்களை அச்சுறுத்தும் செயல் என மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.