சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவருடன் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
ஓமான் வெளி விவகார அமைச்சர் சையித் பத்ர் பின் ஹமத் அல் புசைதி, சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் ஆர்செனியோ டொமிங்குவேஸை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் கடல்சார் சவால்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, சர்வதேச சட்டங்கள் மற்றும் கடல்சார் சட்டங்களை அனைத்து நாடுகளும் பின்பற்றுவதன் அவசியத்தை ஓமான் வெளி விவகார அமைச்சர் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தை
மேலும், தற்போது எழுந்துள்ள சிக்கல்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து, அமைதியான முறையிலும் இணக்கமான முறையிலும் தீர்வுகாண முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அல் புசைதி, "வளைகுடாப் பகுதியில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக விடுவிப்பதற்கும், கடலோர நாடுகளின் ஒத்துழைப்புடன் மனிதாபிமான அடிப்படையிலான முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் தற்போது அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.