அமெரிக்க - ஈரானிய போர்நிறுத்தம்.. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்
ஈரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒப்பந்தம் குறித்த நம்பிக்கைகளால், கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பேச்சுவார்த்தையாளர்கள் வசம் "மிகவும் வலுவான ஒரு திட்டம் மேசையில் உள்ளது" என்றும், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் திங்கட்கிழமை எட்டப்படலாம் என்றும் கூறினார்.
இந்நிலையில் இன்று காலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் (Brent) 5.5 சரிந்து ஒரு பீப்பாய் 97.90 டொலராக (£72.64) வீழ்ச்சியடைந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
அதே நேரத்தில் அமெரிக்க வர்த்தக கச்சா எண்ணெய் 5.9 வீதம் குறைந்து 90.93 டொலராக சரிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த ஒப்பந்தத்தில் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது சேர்க்கப்படும் என்று முன்னர் கூறியிருந்தார்.
ஆனால், அதுகுறித்த கூடுதல் விவரங்களை அவர் வழங்கவில்லை. கடந்த வாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானின் நிலைப்பாடுகள் ஒன்றுபட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வழக்கமாக கடந்து செல்லும் இந்த குறுகிய நீர்வழிப்பாதை, கடந்த பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதில் இருந்தே திறம்பட மூடப்பட்டுள்ளது.
"நாங்கள் இன்னும் முன்னேற்றப் பாதையில்தான் இருக்கிறோம். நான் சொன்னது போல், நேற்றிரவு ஏதேனும் செய்தி கிடைக்கும் என்று நினைத்தோம். ஒருவேளை இன்று கிடைக்கலாம்" என்று டெல்லியில் ரூபியோ கூறினார்.
ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக ட்ரம்ப் முன்னதாக குறிப்பிட்டிருந்த நிலையில், பின்னர் பேச்சுவார்த்தையாளர்களிடம் "ஒப்பந்தத்தை அவசரப்பட்டு முடிக்க வேண்டாம்" என்று அறிவுறுத்தியதாகக் கூறியதைத் தொடர்ந்து ரூபியோவின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.