பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த மாதம் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் தொழிற்கட்சியின் அடுத்த தலைவரையும், நாட்டின் புதிய பிரதமரையும் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ வேட்புமனுத் தாக்கல் செயல்முறைகள் தொடங்கியுள்ளன.
தொழிற்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால், இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார்.
தலைமைப் பதவி
இந்தத் தலைமைப் பதவிக்கான பந்தயத்தில், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரும், "King of the North" என்று அழைக்கப்படுபவருமான ஆண்டி பர்ன்ஹாம் மிக முக்கிய வேட்பாளராகவும், முன்னிலையிலும் உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாகப் பொறுப்பேற்ற பர்ன்ஹாமிற்கு, கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இவருக்கு எதிராகப் பலமான மாற்று வேட்பாளர்கள் யாரும் இதுவரை களம் இறங்காததால், இவர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வேட்புமனுத் தாக்கல்
தொழிற்கட்சியின் "soft left" பிரிவைச் சேர்ந்த ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின் பிராந்திய வேறுபாடுகளைக் களைதல், சமூக வீட்டுவசதித் திட்டங்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற மக்கள் நலக் கொள்கைகளை முதன்மையாகக் கொண்டுள்ளார்.

மேலும், அவர் பிரதமராகப் பொறுப்பேற்றால் லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான '10 டவுனிங் ஸ்ட்ரீட்'டின் சில செயல்பாடுகளை மான்செஸ்டர் நகரத்திற்கும் பரவலாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.