ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது! நாமல் சீற்றம்..
மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த முடியாது என்று தெரிவிக்க ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
படுதோல்வியடைவது உறுதி
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சிறையில் இருந்த பிள்ளையானை நாங்கள் சந்திக்கச் சென்றோம். 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அவர் எமது கட்சியுடன் கூட்டணியமைத்துத் தேர்தல்களில் போட்டியிட்டயால் அவரைச் சந்திக்கச் சென்றோம்.
பிள்ளையானை நாங்கள் சந்திக்கச் சென்றமையை அறிவதற்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரான்ஸுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை.
மட்டக்களப்பு சிறைச்சாலைகுச் சென்று பதிவுப் புத்தகத்தை ஆராய்ந்திருந்தால் அதில் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டிருக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி தோல்வியடைந்துள்ள நிலையில் தற்போது எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. குண்டுத்தாக்குதல்கள் குறித்து அரசு எடுக்கும் சகல விசாரணைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று தெரிவிக்க ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று ஜே.வி.பி.யின் கட்சித் தலைமையகம் தீர்மானிக்குமாயின் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு? 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும் இந்த அரசு நடத்துமா என்பது சந்தேகத்துக்கிடமாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.