மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் போராட்டம்! (Video)
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தொடர்ந்து, குறித்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தச் சென்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களினால் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவத்தைக் கண்டித்து இன்றைய தினம் (13.03.2023) காலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள்,கிராம அலுவலகர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது கடமையை உரிய முறையில் முன்னெடுக்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
வளங்கள் பாதுகாப்பு
மேலும், அரச உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இயற்கை வளங்கள் அழிவடைந்து, அழிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரச உத்தியோகஸ்தர்களுக்கு உள்ளது. மக்களும் எங்களுடன் இணைந்து இயற்கை வளங்களைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், அரச உத்தியோகஸ்தர்கள் தமது கடமையை மேற்கொள்ளும் போது அதற்கான கௌரவத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
எனவே, கடந்த 3ஆம் திகதி மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஆத்தி மோட்டை பகுதியில் இடம் பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தச் சென்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கு எதிராகச் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
எனவே, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச உத்தியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.











உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 40 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
