இந்தியா இலங்கைக்கு நிபந்தனை விதிக்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன் (Video)
“இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகள் விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வொன்றில் நேற்று (16.10.2022) கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சியிலிருந்த தோழர்களின் இழப்பானது எமது கட்சிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மாத்திரமின்றி முழு தமிழ் மக்களுக்கே பாரிய இழப்பாகும்.
தமிழ் சமுதாயம்
தமிழ் மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும்தான் எமது வீரர்கள் போராடச் சென்றார்கள்.
அவர்கள் சகோதரப் படுகொலைகள் மூலமும், இலங்கை அரசாங்காத்தின் மூலமும் தான் படுகொலை செய்யப்பட்டடிருந்தார்கள்.
இவ்வாறு அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 40 வருடங்களைக் கடந்தும் தமிழ் மக்கள் நிம்மதியையோ, சமாதானத்தையோ இதுவரையில் எட்ட முடியாத நிலமையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அரசாங்கத்தில் பல்வேறுபட்ட குழப்பங்கள்
எதிர்காலத்திலாவது உயிர்நீத்த தோழர்கள், போராளிகள், மற்றும் பொதுமக்களின் கனவுகள், நிறைவேற வேண்டுமாக இருந்தால், இந்த மண்ணிலே தமிழ் மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும்.
அரசாங்கத்தில் பல்வேறுபட்ட குழப்பங்களும், தென்பகுதியிலே பல்வேறுபட்ட குழப்பங்களுடன் மிகவும் மோசமானதாகவும் இருந்தாலும்கூட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாட்டை கைவிடுவதாக இல்லை.
ஐ.நா சபையிலே இருக்கின்ற போர்குற்றம், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை எப்படி நீத்துப்போகச் செய்யலாம், அல்லது இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தையும், எவ்வாறு இல்லாமல் செய்யலாம்.
குறிப்பாக எங்களது கட்சியினால் கொண்டு வரப்பட்ட வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கம், எதிர்காலத்தில் எமது கையைவிட்டு நழுவிப்போகும் நிலமைதான் உள்ளது. அதற்கான பேரம்பேசல்கள், அதற்காக வல்லரசுகளுக்கு சில இடங்களை தாரைவார்த்துக் கொடுத்து தமிழர்களுக்கு அதனை இல்லாமல் செய்யும், வேலைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் தமக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புக்களைக் கடந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்
கொடுப்பதற்காக அனைவரும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கேட்க
வேண்டும்” என தெரிவித்துள்ளார்.



