கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப் பெரிய தொடருந்து விபத்து: உலக தலைவர்களுக்கு மோடி விளக்கம்
ஒடிசா தொடருந்து விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் தொடருந்து நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோரவிபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை
இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு தொடருந்தும் அங்கு விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
உலக நாடுகளின் தலைவர்கள்
இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா தொடருந்து விபத்து, கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த தொடருந்து விபத்துக்களில் மூன்றாவது மிகப் பெரிய தொடருந்து விபத்து என தெரிவிக்கப்படும் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக தங்களது இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்திகளில் வெளிப்பட்ட அன்பான வார்த்தைகள், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மன வலிமையை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி மீட்புப் பணிகளை ஆய்வு
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு தொடருந்து உட்பட மூன்று தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளான இடத்துக்கு நேரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்துளளார்.
அங்கு விபத்தில் சிக்கி பாரிய சேதம் ஏற்பட்டுள்ள தொடருந்து பெட்டிகளையும் துரித வேகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளையும் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |