கொழும்பில் ஜெய்சங்கர் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு
புயல், வெள்ளம், மண்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கி அல்லாடும் இலங்கையை, அந்த நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் பேருதவித் திட்டம் ஒன்றை இந்தியா வழங்குவதற்கு முன்வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
நாளை திங்கட்கிழமை கொழும்பு வந்து சேரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இந்தியாவின் பேருதவித் திட்டத்தை கொழும்பில் வைத்து அறிவிப்பார் என விடயம் அறிந்த வட்டாரங்கள் சில தகவல் வெளியிட்டன.
நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இலங்கையைப் பேரிடரின் பின் மீட்பதற்கான பெரும் உதவித் திட்டம் ஒன்றை இந்தியாவின் சார்பில் வழங்குவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருக்கின்றார் என்றும், அதனைக் கொழும்பில் வைத்து அறிவிக்கவே அவரின் விசேட பிரதிநிதியாக இந்திய வெளி விவகார அமைச்சர் கொழும்பு வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் கரம்
இந்த விடயங்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல் எதையும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் இதுவரை வெளியிடவில்லை. ஆயினும் தனிப்பட்ட சில செய்தி வட்டாரங்கள் இந்தச் செய்திகளைக் கோடி காட்டின.

ஒரு நாள் விஜயமாக கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் சேர்த்து ஒன்றாகச் சந்திக்க இருக்கின்றார் என்று தெரிகின்றது.
இலங்கை அரசின் தலைவர்களைத் தவிர, எதிர்க்கட்சிகள் தரப்பில் வேறு யார் யாரை இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் சந்திப்பார் என்பது பெரும்பாலும் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அண்மைய பேரிடரில் சிக்கிய உடனேயே விரைந்து நிவாரண உதவிகளையும், மீட்பு நடவடிக்கை வசதிகளையும் இந்தியா அனுப்பத் தொடங்கியது.
அந்த உதவியை அது தொடர்ந்து வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உடனடி மீட்பு நடவடிக்கைகள் இப்போது வரை இலங்கையில் தொடர்ந்து கொண்டிருப்பதும் கவனத்துக்குரியது.