பலரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா தொடருந்து விபத்து! நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கான காரணம் வெளியானது
உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா தொடருந்து விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ்தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தற்போது வரை 288 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கோர விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் என்ற தொடருந்து பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவில்லையென தொடருந்து செய்தி தொடர்பாளர் அமிதாப்சர்மா தெரிவித்துள்ளார்.
வெளியான காரணம்
தொடருந்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் இந்திய தொழில்நுட்பத்தில் கவாச் என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது. தொடருந்தின் முன்பக்கம் பொருத்தப்படும் இந்தக் கருவி, ஒரே தண்டவாளத்தில் எதிரே தொடருந்து வருவதையோ அல்லது தண்டவாளத்தில் இடையூறு இருப்பதை உணர்ந்தாலோ சுமார் 380 மீட்டருக்கு முன்னதாகவே தன்னிச்சையாக செயல்பட்டு என்ஜின் இயக்கத்தை நிறுத்தி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு சில வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்து நடைபெற்ற ஒடிசா மாநில வழித்தடத்தில் செயல்பாட்டிற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையினை தொடர்ந்து அதிக உயிர்களை பலி வாங்கிய மோசமான தொடருந்து விபத்தாக ஒடிசா தொடருந்து விபத்து கருதப்படுகின்றது.
இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாகவும், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.