தடைப்பட்ட கல் உடைக்கும் தொழில்: தீர்வை எதிர்பார்த்து கல்குவாரி தொழிலாளர்கள்(photos)
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் கல்குவாரி கல் உடைப்பு தொழில் புரியும் மக்கள் தற்போது தொழில் செய்ய முடியாது சிரமங்களை எதிர்கொள்வதாக நேற்று தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்களின் ஜீவனோபாயத் தொழிலாகிய கல்குவாரியில் கல் உடைக்கும் தொழிலை மட்டக்களப்பு மாவட்ட வன பரிபாலன திணைக்களம் தடைசெய்துள்ளதன் காரணமாக தாம் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினை
நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனிக்கு மக்களால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையிலெ இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.
”எமது கிராமத்துக்குள் உள்நுழையும் போது நாங்கள் தற்காலிமாக எல்லை கல் போடுகின்றோம் நீங்கள் கல் உடைக்கலாம் நாங்கள் தடைசெய்யமாட்டோம்”என முன்னர் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது ”கல் குவாரிப் பகுதியில் கல் உடைக்க போகமுடியாது எனவும் கால்நடைகள் மேய்க்க முடியாது எனவும் போனால் எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்”என்றும் வன பரிபாலன அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த பகுதி மக்களினால் அவர்கள் பிரச்சினை தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனிக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
பிரதேசசபை தவிசாளரின் கோரிக்கைக்கமைய அந்த பகுதிக்கு நேற்று(22) விஜயம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளரிடம் இந்த பிரச்சினை தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் இந்த கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தீர்வு
பொதுமக்களின் கல் உடைக்கும் உரிமைப்பத்திரத்தினை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு பிரதேச செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவரால் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.