சம்பள உயர்வை தடுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் முயற்சி தோல்வி: மருதபாண்டி ராமேஷ்வரன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுப்பதற்காக சட்ட ரீதியாக பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்னெடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளதுடன் நீதி வென்றுள்ளது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன்((Maruthapandi Rameshwaran) தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள அவர், இ.தொ.காவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு பேராதரவு வழங்கிய மக்களுக்கு நன்றிகளையும் கூறியுள்ளார்.
1700 ரூபா சம்பளம்
மேலும் அவர் கூறுகையில்,
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை நாளாந்த சம்பளமாக வழங்குமாறு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் இடைக்கால தடை உத்தரவு கோரி இருந்தன.
எனினும், அந்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதாவது, தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு என்பது நியாயமானது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.
எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குவதற்கு முன்வருமாறு பெருந்தோட்ட நிறுவனங்களை வலியுறுத்துகின்றேன்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வு, பொறிமுறை அவசியம், அதனை ஏற்படுத்துவதற்குரிய தொடர் முயற்சிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்றது.
அத்துடன், அந்த முயற்சியில் நிச்சயம் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இ.தொ.கா அன்று முதல் இன்று வரை மக்கள் நலன் சார்ந்த அரசியலையே நடத்தி வருகின்றதுடன் எவ்வாறான சவால்கள் வந்தாலும் மக்களுடன் தோளோடு தோளாக நின்றுள்ளது.
இந்நிலையில், மக்களும் காங்கிரஸ் பக்கம் நின்றுள்ளனர். சம்பள உயர்வு போராட்ட விடயத்தில் இது தெளிவாக தென்பட்டது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |