லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைப்பு
பொதுமக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில், நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு, புதிய புகைப்பட பிரதி இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக, குறித்த கிராம சேவகர் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் மாத்திரமன்றி, பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனாளர்களும் புகைப்பட பிரதி சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை தேவைகள்
குறித்த பகுதியிலுள்ள மக்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஆவணங்களின் புகைப்பட பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, கிராம சேவகர் அலுவலகங்களில் இருந்து சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதன்மூலம் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய ஆவணங்களை பிரதியெடுப்பதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், கிராம சேவகர் அலுவலகத்தின் ஊடான மக்கள் சேவையும் மேலும் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, என்போல்ட் பகுதியில் சுமார் 60 வருட காலமாக மின்சார வசதியின்றி இருளில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பம் ஒன்றிற்கும் இந்த நிகழ்வின் போது இலவசமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் அகஸ்டின் இரவீந்திரன், செயலாளர் பத்மநாதன் கிருபாகரன், மலையக இணைப்பாளர் ஜெ. பத்மநாதன் கிருபாகரன், வாழ்வியல் அமைப்பின் உறுப்பினர் இராயப்பு அந்தோனிப்பிள்ளை, ரா. ரூபரத்தனகுமார் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.





