அக்டோபரில் நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குறித்து வெளியான தகவல்
2025 அக்டோபர் 1 முதல் 29 வரை மொத்தம் 153,063 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்திலும் வழமைப் போன்றே, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள்
இதன்படி 44,741 இந்திய சுற்றுலாப் பயணிகள் அக்டோபரில் வருகைத் தந்துள்ளனர். இது மாதத்தின் மொத்த பயணிகள் வருகையில் 29.2 வீதமாகும்.
அதே காலகட்டத்தில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,128 சுற்றுலாப் பயணிகள், ரஸ்யாவிலிருந்து 10,450 பேர், சீனாவிலிருந்து 10,408 பேர், ஜெர்மனியிலிருந்து 8,950 பேர் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 7,226 பேர் வருகை தந்துள்ளனர்.

மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இந்த நிலையில் 2025 ஜனவரி 1 முதல் அக்டோபர் 29, வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,878,557 பேர் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில், 420,033 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 174,021 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 132,594 பேர் ரஸ்யாவிலிருந்தும் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |