அரசியலமைப்புப் பேரவையில் அதிகரிக்கப் போகும் ஆளுங்கட்சியின் செல்வாக்கு
அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களுக்கான தெரிவு தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையிலான முரண்பாடு காரணமாக ஆளுங்கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்புப் பேரவையின் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான பதிலீடு நடவடிக்கை மூலம் ஆளுங்கட்சியின் செல்வாக்கு அரசியலமைப்புப் பேரவையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் அரசியலமைப்புப் பேரவையானது பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் உள்ளிட்ட பத்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
புதிய உறுப்பினர்கள் தெரிவு
ஏனைய ஏழு உறுப்பினர்களில் ஜனாதிபதி சார்பில் ஒரு உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் ஒரு உறுப்பினர், ஆளுங்கட்சி (பிரதமர்) சார்பில் ஒரு உறுப்பினர், சிறுபான்மை சமூகங்கள் சார்பில் ஒரு உறுப்பினர் மற்றும் சிவில் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான மூன்று உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

தற்போதைய அரசியலமைப்புப் பேரவையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி சார்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் அஜித் பி. பெரேரா, ஆளுங்கட்சி (பிரதமர்) சார்பில் பிமல் ரத்நாயக்க, சிறுபான்மை சமூகங்கள் சார்பில் சிவஞானம் ஸ்ரீதரன், மற்றும் சிவில் சமூகங்ங்களின் பிரதிநிதிகளாக பிரதாப் ராமானுஜம், விசேட மருத்துவ நிபுணர் திலுக்ஷி அனுலா விஜேசுந்தர, தினேஷா சமரரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதால் அவர்களுக்குப் பதில் புதிதாக மூன்று பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் சிவில் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான மூன்று உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டின் பேரில் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புப் பேரவையின் விதியாகும்.
ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு
ஆனால் குறித்த உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர்களில் ஒரு உறுப்பினரை பிரதமரும், இன்னொரு உறுப்பினரை எதிர்க்கட்சித் தலைவரும் முன்மொழிவதுடன் ஒரு உறுப்பினரை மாத்திரம் இருவரின் இணக்கப்பாட்டின் பேரில் நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போதைய அரசியலமைப்புப் பேரவையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி சார்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, ஆளுங்கட்சி (பிரதமர்) சார்பில் பிமல் ரத்நாயக்க என நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான முரண்பாட்டின் காரணமாக பிரதமர் சார்பில் மேலும் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படும் போது அரசியலமைப்புப்பேரவையில் ஆளுங்கட்சி சார்பான ஐந்து உறுப்பினர்கள் பதவி வகிக்கும் சூழல் ஏற்படும்.
அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் அரசியலமைப்புப் பேரவையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகரித்து, ஜனாதிபதிக்குத் தேவையான வகையில் ஏனைய ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனங்கள் முறைகேடான வகையில் நடைபெறக் கூடும் என்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri