அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதாக சஜித் குற்றச்சாட்டு
அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ராஜீவ் அமரசூரியவிற்கு முதலமைச்சர் வேட்பாளர் பதவி உள்ளிட்ட அரசியல் லஞ்சங்களைச் சனநாயக ஐக்கிய முன்னணி வழங்கியதாக தேசிய மக்கள் சக்தி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளார்.
ரத்தினபுரியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பணிமனை திறப்பு விழாவில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, இக்குற்றச்சாட்டு தேசிய மக்கள் சக்தியின் பொய்யான பிரச்சாரங்களின் மற்றொரு அங்கம் எனவும், தமது கட்சி ஒருபோதும் அரசியல் லஞ்சங்களில் ஈடுபட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவை எதிர்க்கும் முயற்சியாகவே முதலமைச்சர் பதவி வாக்குறுதி அளிக்கப்பட்டதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் யாருக்கும் அரசியல் லஞ்சம் கொடுத்ததில்லை எனவும் சுயாதீனமான நீதித்துறைக்காக எப்போதும் உறுதியுடன் நிற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் இருந்து கொண்டு நீதித்துறையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முற்படும் அதே வேளையில் காலியிடங்களை நிரப்பாமல் நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேநீர், ரப்பர், கருவா மற்றும் இரத்தினக் கற்கள் போன்ற வளங்கள் இலங்கையில் இருந்தும், அவற்றை மேம்படுத்தத் தவறிய அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி அதிகாரத்தைத் தக்கவைக்கப் பார்ப்பதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக விலையிலேயே எரிபொருள் வழங்கப்படும், மின்சாரக் கட்டணம் 33% குறைக்கப்படும், நெல்லுக்கு 150 ரூபா குறைந்தபட்ச விலை உறுதி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும், மாறாக நெல் விவசாயிகளுக்கு 17 ரூபா இழப்பை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.