பொருளாதார உந்துசக்தியாக யாழ்ப்பாணம் மாற வேண்டும் : வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் வர்த்தகப் பெருவிழாவான 'யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி - 2026', 16வது ஆண்டாக இந்த முறை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று(23.01.2026) யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இடம்பெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலீடுகள்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வர்த்தகக் கண்காட்சிகள் என்பவை வெறும் பொருட்காட்சிகள் மட்டுமல்ல. அவை பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாகும்.
புதிய கூட்டுப் பங்காண்மைகளுக்கான கதவுகளைத் திறப்பதன் மூலம் இவை முதலீடுகளைத் தூண்டுகின்றன. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு அங்கீகாரத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்கி வலுவூட்டுகின்றன.

விவசாயம், கடற்றொழில், கைவினைப்பொருட்கள் அல்லது தொழில்நுட்பம் என யாழ்ப்பாணத்தின் தனித்துவமான தயாரிப்புகள் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்து, பிராந்திய அபிவிருத்தியை இந்த கண்காட்சி பலப்படுத்துகின்றது.
எதிர்காலத்தை நோக்கிய எமது பயணத்தில், எமது கைத்தொழில்கள் உலக சந்தையில் போட்டியிடக்கூடிய வகையில் அமைவதற்கு, 'டிஜிட்டல் மாற்றத்தை' நாம் அரவணைத்துக் கொள்ள வேண்டும்.
கைத்தொழில் ஊக்குவிப்பு
இதேவேளை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிலையான நடைமுறைகளில் முதலீடு செய்ய வேண்டும். யாழ்ப்பாணத்தின் அடுத்தக்கட்ட சுபீட்சத்தை வடிவமைக்கவுள்ள எமது இளைஞர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
முன்மொழியப்பட்டுள்ள 'வடக்கு வணிக சம்மேளனங்களின் இணையம்' எதிர்காலத்தில் எமது பொருளாதார அபிவிருத்தியில் மிக முக்கிய பங்காற்றும் என நான் நம்புகின்றேன். வடக்கு மாகாணத்தில் இப்போது முதலீட்டுக்குச் சாதகமான சூழல் காணப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கம், வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கான பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. வடக்கின் பல வளங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கப்படாமல் உள்ளன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எமது மாகாண இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்க முன்வருமாறு அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அர்ஜுன் தர்மதாச மற்றும் பணிப்பாளர் ஏ.எப்.எம். பாரூக், யாழ்ப்பாண வணிகர் மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் குலசிங்கம் வசீகரன், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.


ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam