உள்ளூர் இழுவை மடி படகால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு!
உள்ளூர் இழுவை மடி கடற்றொழிலால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று(9.5.2026)தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூர் இழுவை மடி படகுகளின் கடற்றொழில் அதிகரித்துள்ளத்தால் சிறு கடற்றொழிலாளர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
உரிய நடவடிக்கை
சுமார் 40 வரை பயன்பாட்டிலிருந்த உள்ளூர் இழுவை மடி படகு தற்போது யாழ்ப்பாணத்தில் 600 க்கு அதிகமாக உள்ளது. இதனால் மீன் உற்பத்தி இடங்கள் அழிக்கப்படுவதால் கடற்றொழில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுப்பதற்கு மீன்பிடி அமைச்சோ அல்லது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
மேலும் கடற்படை, பொலிஸார், சிறப்பு அதிரடி படை ஆகியோராவது கடற்றொழிலாளர்களின் பிரச்சினையில் அக்கறை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.