அமெரிக்காவின் Hotline திட்டத்தை நிராகரித்தது ஈரான்: ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் தீவிரமடையும் மோதல்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இராணுவ பதற்றத்தைத் தணிப்பதற்காக வொஷிங்டன் முன்மொழிந்த நேரடித் தொடர்பு எல்லை (Hotline) திட்டத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று ஐ.ஆர்.ஜி.சியின் ஊடகத் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை என்பது ஈரானின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்றும், அதற்கும் அமெரிக்காவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, வளைகுடா பகுதியில் மோதல்களைத் தவிர்க்க தோஹாவில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் சந்தித்துப் பேசும் ஹொட்லைன் வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்திருந்த கூற்றை ஈரான் இதன் மூலம் மறுத்துள்ளது.
இந்த இராஜதந்திர முறுக்கல்களுக்கு மத்தியில், கடந்த வியாழக்கிழமை இரவு ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சிங்கப்பூர் கொடி ஏந்திய 'எவர் லவ்லி' என்ற சரக்குக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தீவிரமடையும் மோதல்
இதற்குப் பதிலடியாக, ஈரானின் தெற்கு கடற்கரையில் உள்ள இராணுவ இலக்குகளை நோக்கி அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை அமெரிக்க கடற்படைத் தளம் உள்ள பஹ்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால், கடந்த ஜூன் 17 அன்று இரு நாடுகளும் கையெழுத்திட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் (MoU) தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஓமனுடன் இணைந்து சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) வகுத்துள்ள போக்குவரத்துப் பாதையை ஏற்க மறுக்கும் ஈரான், தங்களின் கட்டுப்பாட்டுப் பாதையை மீறும் வணிகக் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதால், பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு இப்பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை 'தீவிரம்' என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.